/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலுக்கான ஊக்கத்தொகை; உண்ணாவிரதம் இருக்க முடிவு
/
பாலுக்கான ஊக்கத்தொகை; உண்ணாவிரதம் இருக்க முடிவு
ADDED : மார் 14, 2025 12:49 AM
பொங்கலுார்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு,120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்க தொகை நிலுவையில் உள்ளது. பால் விலையை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற தவறான கருத்தை பரப்பி பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது.
நாள்தோறும் இரண்டு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆவின், 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. எட்டு லட்சம் விவசாயிகள் பால் ஊற்றுகிறார்கள். மாதந்தோறும் லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகையை, தமிழக அரசு வழங்கி வந்தது.
நான்கு மாதங்களாக அந்த ஊக்கத்தொகையும் வழங்கவில்லை. இது வருத்தத்திற்குரியது. நிலுவையில் உள்ள, 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
அவ்வாறு வழங்காவிட்டால் சென்னையில் சட்டசபை முன் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.