/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுபட்ட மின் கட்டணம் நுகர்வோர் குழப்பம்
/
விடுபட்ட மின் கட்டணம் நுகர்வோர் குழப்பம்
ADDED : செப் 02, 2024 11:29 PM
திருப்பூர்;விடுபட்ட நாட்களுக்கான, உயர்த்தப்பட்ட கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி அனுப்புவதால், மின்நுகர்வோர் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழகத்தில், நடைமுறை கட்டணத்தில் இருந்து, 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. இத்தகைய அறிவிப்பு, ஜூலை 15ம் தேதி வெளியிடப்பட்டாலும், ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 1 முதல், 15ம் தேதிக்குள் மின் நுகர்வை கணக்கிடப்பட்டு, மின் கட்டணம் செலுத்தியவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள், அந்தகாலகட்டத்தில் பயன்படுத்திய மின்சாரத்துக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமென, குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது.
அதாவது, ஒரு ரூபாய் முதல், 15 ரூபாய் வரை, மின் கட்டணம் செலுத்த வேண்டுமென, சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு, தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், மின்நுகர்வோர் குழப்பமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நேரத்தில், மின் கணக்கீடு செய்து, கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும், விடுபட்ட தொகை கணக்கிட்டு, குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படுகிறது. விருப்பமிருந்தால், அந்த கட்டணத்தை உடனே செலுத்தலாம்; உடனுக்குடன் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. விடுபட்ட கட்டண தொகை, அடுத்த மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்,' என்றனர்.