ADDED : ஆக 08, 2024 11:29 PM

பல்லடம்:'இயற்கையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது,' என சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள் கூறினார்.
பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில், ஆயிரம் பனை நாற்று நடும் நிகழ்ச்சி, காளிவேலம்பட்டி கிராமத்தில் நடந்தது.
தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். தி சென்னை சில்க்ஸ் உரிமையாளர் ஆறுமுகம், 'வனம்' அமைப்பு நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது:
இயற்கையை வஞ்சிக்கும் போது அது நமக்கு ஒரு பாடத்தை புகட்டுகிறது. பஞ்ச பூதங்களும் அமைதியாக இருக்கும்போது நன்றாக இருக்கும். புயல், நிலநடுக்கம், சுனாமியாக மாறும்போது துன்பத்தைக் கொடுக்கும்.
மரங்களை, மலைகளை அழித்து, இயற்கையின் வழித்தடங்களை மாற்றியதால் துன்பத்தை அனுபவிக்கிறோம். இன்பம் வரும் போது என்னால் என்று கூறும் நாம்; துன்பம் வரும்போது அடுத்தவரை கை காட்டுகிறோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
தற்போது, காற்றைக் கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலைத்தான் நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும். வழிபாட்டுக்கு உகந்ததாக இருந்த கூவமும், நொய்யலும் இன்று எப்படிப்பட்ட அவல நிலையில் உள்ளது. இதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தான் காரணம். இதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரையும் சேர்ந்தது.
இவ்வாறு அவர் பேசினார். சப்-கலெக்டர் சவுமியா, செஞ்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். காளிவேலம்பட்டி குட்டையில் ஆயிரம் பனை மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.