/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வு; சாதனை வசமானது எப்படி? மாணவ, மாணவியர் பேட்டி
/
'நீட்' தேர்வு; சாதனை வசமானது எப்படி? மாணவ, மாணவியர் பேட்டி
'நீட்' தேர்வு; சாதனை வசமானது எப்படி? மாணவ, மாணவியர் பேட்டி
'நீட்' தேர்வு; சாதனை வசமானது எப்படி? மாணவ, மாணவியர் பேட்டி
ADDED : ஜூன் 08, 2024 11:49 PM
இளநிலை மருத்துவப் படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து மையங்களில், 464 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட, 2,250 பேர் தேர்வெழுதினர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி அளவில், 234 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டை விட நடப்பு ஆண்டு தேர்வெழுதியவரும், தேர்ச்சி பெற்றவரும் அதிகம்.
திட்டமிட்டேன்; வெற்றி கிட்டியது
'நீட்' தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில், ஊதியூர், சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய், 720க்கு, 687 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் கூறியதாவது:
உயர்நிலை பள்ளி படிப்பை முடிக்கும் போதே, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானது. 'நீட்' தேர்வுக்கு எப்படி ஒவ்வொருவரும் தயாராகின்றனர் என்பதை முன்பு தேர்வு எழுதியவர்களிடம் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டேன். படிப்பு, தேர்வு இரண்டிலும் நேர மேலாண்மை மிக முக்கியம் என்பதால், அதற்கேற்ப திட்டமிட்டு தயாரானேன். பயிற்சி மையத்தில் இணையாமல், நேரடியாக நாமே படிக்க, புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது.
மொபைல் போன், 'யூடியூப்'பில் 'நீட்' குறித்து தேடியபோது, ஏராளமான விஷயங்களை அறிய முடிந்தது. 'நீட்' தேர்வுக்கான கேள்வி, பதிலளிக்கும் முறைகளை அறிந்து கொண்டு, குறிப்பெடுத்து படித்தேன். அனைத்து சந்தேகங்களுக்கும் 'யூடியூப்'பில் விடை கிடைத்தது. நம் கையில் வைத்திருக்கும் மொபைல் போனை நல்லவற்றுக்கு பயன்படுத்தினால், படிப்புக்கும், உயர்கல்விக்கும் பெரிதும் உதவும்.
பயிற்சி, விடாமுயற்சி கைகொடுத்தது
'நீட்' தேர்வு ஏற்கனவே எழுதியவர் பிரி வில், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பவானி, 720க்கு, 650 மதிப்பெண் மாநில இரண்டாமிடம் பெற் றுள்ளார். கடந்த தேர்வில், 401 மதிப்பெண் பெற்றவர், இம்முறை கூடுதலாக, 249 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு முடித்தவுடன் 2023ல் தேர்வெழுதிய போது, 401 மதிப்பெண் பெற்றேன். இன்னமும் கூடுதலாக முயற்சி எடுத்தால், அடுத்தாண்டு தேர்வில் நிச்சயம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்ற எண்ணம் தோன்றியது.
கேள்விகளைச் சரியாக புரிந்து கொள்ளாமல், ஒருமுறை தடுமாற்றம் ஏற்பட்டதால், அடுத்து தயாரான தேர்வுக்கு அதிக கேள்விகளை தொடர்ந்து, பயிற்சி எடுத்தேன். எந்தப் பாடங்களுக்கு எப்படிக் கேள்விகள் இடம் பெறும், எவ்வாறு விடையளிக்க வேண்டும் என தொடர்ந்து பயிற்சி எடுத்தேன்.
கடந்த முறை அதிக தவறுகள் செய்த பாடங்களில் இந்த முறை தவறு செய்யவே கூடாது என திட்டமிட்டு, முந்தைய ஆண்டின் வினாத்தாள்களை 'ரிவிஷன்' செய்து, பயிற்சி எடுத்தேன். நான் படித்த அகாடமியில் அடிக்கடி மாதிரி தேர்வு நடத்துவர்.தேர்வுகளை சரியான நேரத்துக்குள் எழுதி முடிப்பேன்; தொடர்ந்து, பயிற்சி, விடாமுயற்சியுடன் மாதிரி தேர்வுகளை எதிர்கொண்டதால், கடந்த முறை, 401 மதிப்பெண் பெற்ற என்னால், இம்முறை, 650 மதிப்பெண் பெற முடிந்தது.
பொறுமையாக யோசித்து எழுதினேன்
மாவட்டத்தில், அரசு பள்ளி அளவில் முதல் மதிப்பெண்ணை, திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரூபாஸ்ரீ, 720 க்கு, 441 பெற்றார். அவர் கூறியதாவது:
உயிரியல் ஆசிரியர் பிரதோஷ் கற்பித்த பாடம் மூலம் தான் எனக்கு மருத்துவ படிப்பில் இணைய ஆர்வம் எழுந்தது. இயற்பியல் பாட ஆசிரியர் ராஜேஸ்வரி எண்ணிலடங்கா தகவல்களை எடுத்துக்கூறினார்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அறிவியல் சார் புத்தகங்களை முழுமையாக படித்து, என்.சி.ஆர்.டி., புத்தகங்கள் உதவியுடன் தேர்வுக்கு தயாரானேன். படித்த கேள்விகள் நிச்சயம் இடம்பெறும். எனவே, அவசரமில்லாமல், யோசித்து, பொறுமையாக சரியான விடையெழுதினாலே, நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்ற எங்கள் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களே, 441 மதிப்பெண் பெற பேருதவியாக இருந்தது.