/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளூர் நீராதாரங்கள் பராமரிப்பில் அலட்சியம்; தணிக்கை செய்து நடவடிக்கை தேவை
/
உள்ளூர் நீராதாரங்கள் பராமரிப்பில் அலட்சியம்; தணிக்கை செய்து நடவடிக்கை தேவை
உள்ளூர் நீராதாரங்கள் பராமரிப்பில் அலட்சியம்; தணிக்கை செய்து நடவடிக்கை தேவை
உள்ளூர் நீராதாரங்கள் பராமரிப்பில் அலட்சியம்; தணிக்கை செய்து நடவடிக்கை தேவை
ADDED : ஆக 01, 2024 12:39 AM

உடுமலை : உள்ளூர் நீராதாரங்களை பராமரிக்காமல், ஊராட்சி நிர்வாகத்தினர் காட்டிய தொடர் அலட்சியத்தால், பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது; திட்டங்களுக்கு செலவிடப்பட்ட அரசு நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்துக்கு, முன்பு, அமராவதி ஆற்றை ஆதாரமாகக்கொண்ட தாமரைப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டம் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.
இத்திட்டத்திலும், குறைவான கிராமங்களே பயன்பெற்று வந்தன. பின்னர், அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு, கைவிடப்பட்டது.
இந்நிலையில், கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில்,உள்ளூர் நீராதார திட்டங்கள் முக்கிய பங்கு வகித்தன.
பொதுக்கிணறுகள் பயன்பாடு இல்லாமல் விடப்பட்ட நிலையில், புதிதாக போர்வெல் அமைத்து, மின் இணைப்பு மற்றும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஒன்றிய பொது நிதியில், இப்பணிகளுக்காக செலவிடப்பட்டது.
மேலும், பராமரிப்புக்காக கணிசமான தொகை ஊராட்சி பொது நிதியிலும் ஒதுக்கீடு செய்தனர். ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில், தற்போது உள்ளூர் நீராதார திட்டங்கள் எதுவும் பயன்பாட்டில் இல்லை.
போர்வெல்களை இயக்காதது தொடர் பராமரிப்பை கண்டுகொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால், இந்த கட்டமைப்பு முழுமையாக சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. இதனால், கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பற்றாக்குறை வினியோகம் இருக்கும் போது, அவசர தேவைக்கு கூட உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்த முடிவதில்லை. மக்களும் குடிநீருக்காக போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழு அமைத்து, உள்ளூர் நீராதார திட்டங்களுக்காக ஊராட்சிகளால் செலவிடப்பட்ட தொகை குறித்து, தணிக்கை செய்ய வேண்டும்.
போர்வெல்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்னைகள் எழும் போது, உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்தி, தற்காலிக தீர்வு ஏற்படுத்த முடியும்.