/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடைபாதை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை
/
நடைபாதை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை
ADDED : ஜூலை 31, 2024 01:07 AM

பல்லடம்;பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உட்பட, ஏராளமான தனியார் வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன.
வாரச்சந்தை நடைபெறும் திங்கள்கிழமை என்.ஜி.ஆர்., ரோட்டில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். அதிகளவில் வியாபாரிகள் ரோட்டிலேயே கடை அமைப்பதால், வாகனங்கள் நிறுத்த இடம் இன்றி, ரோட்டிலேயே பார்க்கிங் செய்யப்படுகின்றன.
இதனால், நடைபாதை வியாபாரிகளிடம் தாங்களாகவே கடைகளை அகற்றிக் கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகள் கூறியிருந்தனர். இருப்பினும், கடைகளை அகற்றிக்கொள்ளாததால், நகராட்சி அதிகாரிகள் நேற்று களமிறங்கினர்.
இதனால், ஆவேசம் அடைந்த வியாபாரிகள், 'திடீரென கடைகளை அகற்றச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது,' எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதனால், நகராட்சி அலுவலகத்தில், நடைபாதை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கடைகளை அமைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.