/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய கோணம்... சீரிய முயற்சி... புதுமை செயல்பாடு கோணம் முயற்சி செயல்பாடு வெற்றி வசப்பட நற்சூத்திரம்
/
புதிய கோணம்... சீரிய முயற்சி... புதுமை செயல்பாடு கோணம் முயற்சி செயல்பாடு வெற்றி வசப்பட நற்சூத்திரம்
புதிய கோணம்... சீரிய முயற்சி... புதுமை செயல்பாடு கோணம் முயற்சி செயல்பாடு வெற்றி வசப்பட நற்சூத்திரம்
புதிய கோணம்... சீரிய முயற்சி... புதுமை செயல்பாடு கோணம் முயற்சி செயல்பாடு வெற்றி வசப்பட நற்சூத்திரம்
ADDED : மார் 31, 2024 11:59 PM

திருப்பூர்;திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி குறித்து அறிந்துகொள்வதற்கான 'வழிகாட்டி' நிகழ்ச்சியில், கல்வி வல்லுனர்கள் பலர் பேசினர்.
இந்திய பாதுகாப்புத்துறை, ராணுவ விஞ்ஞானி டாக்டர் டில்லிபாபு பேசியதாவது:
திருப்பூர் என்றால் திருப்பம்; வழிகாட்டி நிகழ்ச்சி மாணவ, மாணவியர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். தேசம், சொந்தமாக ஆராய்ச்சி செய்து, போர்விமான இன்ஜின் வடிவமைக்கும் ஆராய்ச்சி குழுவில், தமிழகத்தில் இருந்து நானும் உறுப்பினராக இருக்கிறேன்.
உலக அளவில், நான்கு நாடுகள் மட்டும் போர் விமானங்களை வடிவமைக்கின்றன; இந்தியாவும், 5வது நாடாக போர் விமான இன்ஜின் தயாரிக்கும் நாடாக உருவெடுக்கும். ராணுவத்துறையில் மட்டும், ஏழு வேறுபட்ட துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
போர் விமானம் உருவாக்கும் ஆராய்ச்சி, போர் ெஹலிகாப்டர் உருவாக்கும் ஆராய்ச்சி, ஆளில்லா போர்விமானம், மின்னணு மற்றும் தொலைதொடர்பு ஆராய்ச்சி என, பல வாய்ப்புகள் உள்ளன.
பல கட்ட ஆராய்ச்சி
போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பல், சோலார் வானிலை ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம் என, முன்னேறி ெதாழில்நுட்பத்தில் இரவு - பகலாக ஆய்வு செய்து வருகின்றனர். ராணுவ டேங்க் வடிவமைக்க, ராக்கெட், ஆர்மி ட்ரெக் என, ஒரே நிறுவனத்தில் ஏழு வித்தியாசமான ஆராய்ச்சி, தண்ணீர், விண்வெளி, தண்ணீருக்கு அடியில், வானில் பலகட்ட ஆராய்ச்சி நடக்கிறது.
ராணுவம், கப்பல்படை, விமானப்படை முப்படையில் மூளையாக இருப்பது, ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்.
மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க, 'மிலிட்டரி பாலம்' அமைக்கிறோம்.
படித்தால் மட்டும் போதுமா?
மெத்த படித்த அனைவரும் வெற்றி பெற முடியாது; புதிய கோணத்தில் சிந்தித்து, புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும். புதுமையான செயல்பாடுகளால் மட்டுமே, அடுத்த 25 ஆண்டுகளில் வெற்றி வசப்படும். அந்தவகையில், ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் புதுமை செய்து வருகிறது.
காண்பதை, கேட்பதை, உணர்வதை ஆராய்ச்சி செய்து, பல முக்கிய படைப்புகளை தேசத்துக்கும், மக்களுக்கும் அளித்துள்ளோம். புதுமையாக யோசித்து செயல்பட வேண்டும்.
விமானத்தில், ஆக்ஸிஜன் சிலிண்டர் வாயிலாக, விமானிக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும். வளிமண்டல காற்றில், 21 சதவீத ஆக்ஸிஜன் இருக்கிறது. சிலிண்டர் தேவையா என யோசித்தோம். பிறகு, விமானி பறக்கும் போது, இன்ஜின் காற்றை இழுக்கும். அதிலிருந்து ஆக்ஸிஜனை பிரித்து விமானிக்கு அளிக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.
கொரோனா காலத்தில், ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு வந்த போது, நிமிடத்துக்கு, 1000 கிலோ ஆக்ஸிஜனை வழங்கும், 500 ஆக்ஸிஜன் கருவிகளை செய்து கொடுத்தோம்.
கடும் பனிப்பொழிவில் இருக்கும் ராணுவத்தினருக்காக, பாக்டீரியா செயல்படும் 'பயோ டாய்லெட்' தயாரித்து கொடுத்தோம். ஆராய்ச்சி மூலம் கொடுத்தது, இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதில், 60 ஆண்டுகளுக்கு எவ்வித பராமரிப்பு செலவும் இருக்காது. இதே தொழில்நுட்பம், ரயில் பெட்டி கழிப்பறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய மக்களின் கண்ணீரை துடைக்கும் எந்தவொரு ஆராய்ச்சியும் வரவேற்கத்தக்கது. அதில், உயர்வுமில்லை; தாழ்வுமில்லை; தேசத்தின் மலர்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும், ராணுவ விஞ்ஞானிகள் இரவு - பகலாக பணியாற்றி வருகிறோம்.

