/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனியும் வேண்டாம் தாமதம்! தொழிலை தக்கவைக்க ஆயத்தமாக வேண்டும்: பாலியஸ்டர் தொழில் நுட்பமே நிரந்தர தீர்வு
/
இனியும் வேண்டாம் தாமதம்! தொழிலை தக்கவைக்க ஆயத்தமாக வேண்டும்: பாலியஸ்டர் தொழில் நுட்பமே நிரந்தர தீர்வு
இனியும் வேண்டாம் தாமதம்! தொழிலை தக்கவைக்க ஆயத்தமாக வேண்டும்: பாலியஸ்டர் தொழில் நுட்பமே நிரந்தர தீர்வு
இனியும் வேண்டாம் தாமதம்! தொழிலை தக்கவைக்க ஆயத்தமாக வேண்டும்: பாலியஸ்டர் தொழில் நுட்பமே நிரந்தர தீர்வு
ADDED : ஜூலை 04, 2024 05:27 AM

திருப்பூர்: திருப்பூரில் இருந்து ஆடைகளை வாங்கி விற்கும் வடமாநில வர்த்தகர்கள், பாலியஸ்டர் பின்னலாடை தயாரிக்கும் யூனிட்டுகளை துவக்கி வருகின்றனர். இதனால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி யூனிட்டுகளுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலியஸ்டர் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும்.
பனியன் வர்த்தக வளர்ச்சியை பார்த்து அதிசயத்த வடமாநிலங்கள், அம்மாநிலங்களில் தொழில் துவங்க வருமாறு அழைக்கின்றன. திருப்பூரில் தொழில் பழகிய வடமாநில தொழிலாளர்களை கொண்டு, வடக்கே புதிய யூனிட்டுகளை துவக்கவும், தேவையான உதவி செய்ய காத்திருக்கின்றன.
திருப்பூர் பனியன் தொழில் என்பது, பல்வேறு நாடுகளுடன் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ளது. திருப்பூரிலுள்ள, 2 ஆயிரத்துக்கும் அதிகமான குறு, சிறு பனியன் ஆடை உற்பத்தியாளர்கள், வடமாநில வியாபாரிகளிடம் ஆர்டர் வாங்கி, ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
மாபெரும் சவால்
நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு ஜவுளி சந்தைகளில், திருப்பூரில் உற்பத்தியான பனியன் ஆடைகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. பாலியஸ்டர் பின்னலாடை உற்பத்தி துவங்கிய பின், வடமாநில மொத்த வியாபாரிகளே, ஆடை உற்பத்தி செய்யும் முயற்சியை துவக்கியிருப்பது, திருப்பூரின் எதிர்காலத்துக்கு மாபெறும் சவாலாக மாறியுள்ளது.
'ஜாப் ஒர்க்'
யூனிட்டுக்கு ஆபத்து
வடமாநிலங்களில் இருந்து பாலியஸ்டர் பின்னல் துணியை, 'ரெடி டூ கட்' என்ற அடிப்படையில், ஆடை வடிவமைப்புக்கு தயார் நிலையில் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், திருப்பூரில் ஆடை உற்பத்தி செய்வதற்கு பதிலாக, உள்ளூரிலேயே தயாரிக்கலாம் என, யூனிட்டுகளை துவக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், திருப்பூரில் உள்ள, குறு, சிறு பனியன் உற்பத்தி நிறுவனங்களும், பெரும்பாலான 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களையும் மூட வேண்டிய அபாயம் ஏற்படும்.
நேரம் பார்த்து
கால்பதித்தனர்
இந்தியாவில், 2021ல், பருத்தி பஞ்சு மற்றும் நுால் விலை அபரிமிதமாக உயர்ந்த போது, வடமாநில வர்த்தகர்கள், பாலியஸ்டர் பேப்ரிக்கை சத்தமில்லாமல் தொழிலில் நுழைத்துவிட்டனர். பாலியஸ்டர் ஆடை உற்பத்தியும் துவங்கப்பட்டது. அதன்விளைவு, பருத்தி ஆடை உற்பத்தியே பெரும் கேள்விக்குறியாக இன்று மாறியிருக்கிறது.
டில்லி, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, சூரத் பகுதிகளில் உள்ள மொத்த ஆடை வியாபாரிகள், ஆடை உற்பத்தி யூனிட்டுகளை துவக்கி வருகின்றனர். புதிய 'டிரெண்டிங்'ல், பாலியஸ்டர் பேப்ரிக் உருவாக்கி, ஆடை வடிவமைப்பில் அசத்தி வருகின்னறர்.
5 சதவீதம்
யூனிட்கள் 'ஜரூர்'
வட மாநில வர்த்தர்கள், கடந்த, 20 ஆண்டுகளாக, திருப்பூருக்கு வந்து, 15 நாட்கள் தங்கி, ஆர்டர் கொடுப்பது வழக்கம். பாலியஸ்டர் பேப்ரிக் எளிதாக கிடைத்ததால், திருப்பூருக்கு ஏன் செல்ல வேண்டும் என்று யோசித்து, சொந்த யூனிட்டுகளை துவக்கி விட்டனர்.
திருப்பூருடன் ஒப்பிடும் போது, 5 சதவீத யூனிட்டுகள் வடமாநிலங்களில் துவங்கியுள்ளனர். அந்த பாதிப்பையே, திருப்பூர் குறு, சிறு உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களால் சமாளிக்க முடியவில்லை. மும்பை, டில்லி பகுதிகளில் யூனிட் துவங்கியதால், திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த ஆர்டர்கள் 60 சதவீதம் குறைந்துவிட்டன.
பேப்ரிக் துணியை வடமாநிலங்களில் இருந்து எடுத்துவர, கிலோவுக்கு, 7 ரூபாய் (ஒரு ஆடைக்கு 2 ரூபாய்) செலவு ஏற்படும். ஆடை தயாரிப்பு அனுப்ப, பண்டலுக்கு 1,200 ரூபாய் (ஆடை ஒன்றுக்கு, 4 ரூபாய்) செலவாகிறது. குறைந்தபட்ச லாபம் சேர்த்து, 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து, திருப்பூர் உற்பத்தியாளர்கள் விற்கின்றனர்.
இதனையே, குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களை கொண்டு, வடமாநிலங்களில் ஆடை தயாரித்தால், போக்குவரத்து செலவு முற்றிலும் குறையும். லாபம் அதிகம் கிடைக்கும் என்று கணக்கிட்டு, மொத்த வியாபாரிகளே, சொந்தமாக யூனிட்டுகளை துவக்கியுள்ளனர்.
முழுமையாக
நிறுத்தவில்லை
வர்த்தகர்கள், பருத்தி நுாலிழை ஆடைகளுக்கு திருப்பூரை சார்ந்துள்ளனர்; மேலும், சில குறிப்பிட்ட ரக பனியன் ஆடைக்காக திருப்பூரை சார்ந்துள்ளனர். இதனால், திருப்பூருடனான தொடர்பை முற்றிலும் துண்டிக்கவில்லை. இருப்பினும், வரவு - செலவு பரிவர்த்தனையை கணிசமாக குறைத்துக்கொண்டனர்.
பருத்தி ஆடை வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டால், திருப்பூர் குறு, சிறு நிறுவனங்களுக்கு வேலையில்லாமல் போகும் அபாயமும் உள்ளது. தற்போதுள்ள நிலை தொடர்ந்தால், திருப்பூரின் உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை உற்பத்தி தொழில் காற்றில் கரைந்தது போல் காணாமல் போய்விடும்.
என்ன தான்
செய்யலாம்?
'பாலியஸ்டர் பேப்ரிக்' ரகங்களை, வட மாநிலத்தில் வாங்கி பயன்படுத்தாமல், திருப்பூரிலேயே செயற்கை நுாலிழையில் இருந்து, 'பேப்ரிக்' உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும். வழக்கமான துணியாக இல்லாம, புதுவகை 'பேப்ரிக்'குகள் தயாரிக்கப்பட வேண்டும். பாலியஸ்டர் துணிக்கு சாயமிடுவதும் எளிதாக மாற வேண்டும்.
அத்தகைய நிலை வந்தால், நேர்த்தியான பாலியஸ்டர் ஆடை தயாரித்து, குறைந்த விலையில் விற்க முடியும். அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால், தாங்கள் துவக்கிய யூனிட்டுகளை மூடிவிட்டு, மீண்டும் திருப்பூரில் இருந்தே கொள்முதல் செய்ய வடமாநில வர்த்தகர்கள் இறங்கி வருவார்கள்.
திருப்பூரில், பாலியஸ்டர் துணி உற்பத்தி, அனைத்து வகை 'பிராசசிங்' கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பிரிவினரும், தனித்தனி பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. உற்பத்தி திறன் அதிகம் என்பதால், பாலியஸ்டர் ஆடை உற்பத்தியிலும் திருப்பூர் கால் பதிக்க வேண்டும்.
குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளர்கள், 'ஜாப்ஒர்க்' நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, ஓரணியில் திரண்டு, ஒற்றுமையாக கரம் கோர்த்தால் மட்டுமே, பனியன் ன் தொழிலின் எதிர்காலத்தையும், திருப்பூரையும் பாதுகாக்க முடியும்.
-------------------------------------------------------
பாலியஸ்டர் பிராஸசிங்
திருப்பூரில் வேண்டும்
வடமாநிலங்களில் உற்பத்தி யூனிட் துவங்கியதால், மூன்று ஆண்டுகளாக திருப்பூர் ஸ்தம்பித்து போயுள்ளது. ஏற்றுமதி மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால், குறு, சிறு நிறுவனங்களுக்கு பிரச்னை என்பதால், அதனை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு களமிறங்க வேண்டும்.
திருப்பூரை போல் தரமான ஆடை தயாரிக்க முடியாது என்பதால், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நாம் தயாராக வேண்டும். பாலியஸ்டர் பிராஸசிங் திருப்பூரில் கிடைத்தால், ஒட்டுமொத்த பிரச்னையும் தீரும். பாலியஸ்டர் பிராசசிங் மிகவும் சிரமமானது; பாலியஸ்டர் ஆடை தயாரிக்க துவங்கிய வர்த்தகர்கள், பருத்தி ஆடைகளை எளிதாக உற்பத்தி செய்ய முடியும்.
எனவே, திருப்பூரில் பாலியஸ்டர் பின்னலாடை உற்பத்திக்கான ஒட்டுமொத்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான், பருத்தி ஆடை உற்பத்தியும், திருப்பூர் வசமே தொடரும். இன்னும் சில ஆண்டுகள் இப்படியே இருந்தால், ஒட்டுமொத்த பனியன் தொழிலும் வடமாநிலங்களுக்கு நகர்ந்துவிடும்.
முதல்கட்டமாக, அனைத்து தொழில் அமைப்புகளும், ஓரிடத்தில் சந்தித்து பேச வேண்டும். அப்போதுதான், பனியன் தொழிலை பாதுகாப்பது குறித்தும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வழிகாட்டுதல் குறித்தும் தெளிவு பெற முடியும்.- --
- முகமது ஷபி
திருப்பூர் சிறு, குறு உள்நாட்டு பின்னலாடை
உற்பத்தியாளர் சங்க தலைவர்