/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலில் மட்டுமல்ல.. கல்வியிலும் சாதனை: சவால்களை கடந்து சாதித்த திருப்பூர் அரசுப்பள்ளிகள்!
/
தொழிலில் மட்டுமல்ல.. கல்வியிலும் சாதனை: சவால்களை கடந்து சாதித்த திருப்பூர் அரசுப்பள்ளிகள்!
தொழிலில் மட்டுமல்ல.. கல்வியிலும் சாதனை: சவால்களை கடந்து சாதித்த திருப்பூர் அரசுப்பள்ளிகள்!
தொழிலில் மட்டுமல்ல.. கல்வியிலும் சாதனை: சவால்களை கடந்து சாதித்த திருப்பூர் அரசுப்பள்ளிகள்!
ADDED : மே 06, 2024 11:33 PM
திருப்பூர்:பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ள நிலையில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித அடிப்படையிலும், திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளே முதலிடம் தக்க வைத்திருக்கின்றன; இதற்காக, ஆசிரியர்கள் எடுத்த முயற்சியை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்ற நிலையில், அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்திலும், திருப்பூர் மாவட்டமே முதலிடம் பெற்றிருக்கிறது.
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மெனக்கெடல் மற்றும் மாணவர்களின் மனநிலை குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது;
ஆசிரியர்களின் கடின உழைப்பு
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்திற்காக ஆசிரியர்கள் கடுமையாக உழைத்துள்ளனர்; தினசரி தேர்வு, தொடர் பயிற்சி, மாலை நேர சிறப்பு வகுப்பு என கற்பித்தலில் கூடுதல் கவனம் செலுத்தியதன் விளைவு தான், மாநில தர வரிசையில் முதலிடம் பெறுவதற்கு காரணம். அதற்கேற்ப மாணவ, மாணவியரின் கற்பித்தல் ஆர்வம், திறமை மேம்பட்டிருக்கிறது என்பதையும் உணர முடிந்தது.
அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை, 90 சதவீத பெற்றோர், 'அட்மிஷனு'க்கு வருவதோடு சரி; அதன்பிறகு, பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளையின் கற்பித்தல் திறன், ஒழுக்கம் உள்ளிட்ட விஷயங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வதில்லை.
பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை; பெற்றோரின் கவனம் இருந்தால், தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும்.
பணிச்சுமை குறையணும்
அரசுப்பள்ளியில் ஆரம்பப் பள்ளி துவங்கி, மேல்நிலைப்பள்ளி வரை, தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கான பணிச்சுமை என்பது மிக அதிகம். தற்போது, ஆசிரியர்களின் வருகை பதிவு துவங்கி, 'எமிஸ்' எனப்படும் மாணவர்களின் விவரங்களை சேகரிப்பது வரை அனைத்தும் 'ஆன் லைன்' வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதால், பணிச்சுமை அதிகம்.
மேலும், அரசு வழங்கும், 14 வகையான இலவச திட்டங்கள், அவை மாணவர்களுக்கு வழங்கப்படும் விவரம் உள்ளிட்ட 'கிளரிக்கல்' வேலை என்பது அதிகம். இந்த பணிச்சுமையுடன் ஆசிரியர்கள் கல்வி போதிப்பிலும் கவனம் செலுத்தும் போது, சற்று மனச்சுமை அடைகின்றனர். எனவே, அரசு பள்ளிகளில் 'கிளரிக்கல்' வேலையை செய்வதற்கு, தொகுப்பூதிய அடிப்படையிலாவது ஊழியர்களை நியமித்தால், ஆசிரியர்களின் பணிச்சுமை குறையும்; இதனால், அவர்களின் கல்வி போதிப்பு திறனும் மேம்படும்; தேர்ச்சிவிகிதம் அதிகரிக்கும்.
மாணவர்களிடம்ஆர்வம் குறைவு
பெரும்பாலான மாணவர்கள், மனப்பாடம் செய்து எழுதும் ஆற்றலை இழந்திருக்கிறார்கள்.
அவர்களை திரும்ப, திரும்ப எழுத வைத்து பயிற்சி வழங்குவதன் வாயிலாகவே தேர்வுக்கு தயார்படுத்த முடிகிறது. சொந்தமாக விடைகளை எழுதினால் கூட, தவறு தவறாக எழுதுகின்றனர்.
இத்தகைய சவால்களையெல்லம் எதிர்கொண்டு தான் மாணவ, மாணவியரை, ஆசிரியர்கள் தேர்வுக்கு தயார்படுத்தி, மாநில தரவரிசையில் முதலிடம் பெற உறுதுணையாக இருந்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.