/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெற்பயிரில் ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி
/
நெற்பயிரில் ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி
ADDED : மே 14, 2024 11:29 PM

உடுமலை;மடத்துக்குளம் வட்டாரத்தில், வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வேடபட்டியில் விவசாயிகளுக்கு, நெற்பயிரில் ஊட்டச்சத்து பராமரிப்பு குறித்து பயிற்சியளித்தனர்.
பயிர்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியம், சிறப்பு அம்சங்கள், நெற்பயிருக்கு எவ்வாறு ஊட்டச்சத்து அளிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
அப்போது, நெற்பயிர் விளைச்சல் பாதிப்பு மற்றும் விலை சரிவு காரணமாக, விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைப்பதில்லை.
இதற்கு தீர்வாக, நெல் பயிருக்கு தேவையான தழைச்சத்து, சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துகள், எப்போது, எந்த அளவு தேவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், பயிரில் வளர்ச்சி குறைபாடு, இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், பழுதான வேர் வளர்ச்சி, பலவீனமான தண்டு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, அறிவியல் முறையில் நெற்பயிருக்கு ஊட்டச்சத்து அளித்தால், பயிருக்கு தேவையான அளவு இடுபொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இயற்கை முறையில் தொழு உரம், கோழி உரம் போன்றவற்றை பயன்படுத்தினால் மண்ணின் வளம் பெருகும். இதனால் பயிர் விளைச்சல் பெருகுவதுடன், விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும், என, மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

