/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூறைக்காற்றில் முறிந்த வாழைக்கு இழப்பீடு தேர்தல் விதியை கூறி பின்வாங்கும் அதிகாரிகள்
/
சூறைக்காற்றில் முறிந்த வாழைக்கு இழப்பீடு தேர்தல் விதியை கூறி பின்வாங்கும் அதிகாரிகள்
சூறைக்காற்றில் முறிந்த வாழைக்கு இழப்பீடு தேர்தல் விதியை கூறி பின்வாங்கும் அதிகாரிகள்
சூறைக்காற்றில் முறிந்த வாழைக்கு இழப்பீடு தேர்தல் விதியை கூறி பின்வாங்கும் அதிகாரிகள்
ADDED : மே 17, 2024 12:11 AM
திருப்பூர்:'தேர்தல் நடத்தை விதியை காரணங்காட்டி, சூறைக்காற்றுக்கு விழுந்த வாழை மரங்களுக்கு, இழப்பீடு வழங்கும் நடைமுறையை பின்பற்ற வருவாய் துறை அதிகாரிகள் முன்வருவதில்லை' என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுக்க சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட சில இடங்களில் கடந்த வாரம், சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு, பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், காற்றுக்கு சாய்ந்தன.
சாய்ந்த வாழை மரங்கள் குறித்து, தோட்டக்கலை துறையினர் கணக்கெடுத்தனர்.
வருவாய்த்துறையினர் வழங்கும் அறிக்கை அடிப்படையில் தான், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்ற நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், சேதம் தொடர்பான அறிக்கையை வழங்க வருவாய் துறையினர் மறுக்கின்றனர் என்ற புகார் எழுந்திருக்கிறது.
இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்தன. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், சேதம் தொடர்பான கள ஆய்வு அறிக்கையை வழங்க, வருவாய் துறையினர் மறுக்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிகாரிகள் இயல்பான பணிக்கு வருவதற்குள், காற்றுக்கு வாழைகள் விழுந்த விவகாரம் நீர்த்து போய் விடும். இது ஒருபுறமிருக்க, 'குறிப்பிட்ட கிராமம் முழுக்க பயிரிடப்பட்டுள்ள வாழை சேதமடைந்தால் தான் இழப்பீடு வழங்கப்படும்' என, அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவும் ஏற்புடையதல்ல. இயற்கை பேரிடர் என்பது, இடத்துக்கு ஏற்றாற் போல மாறுபடுகிறது.
எனவே, இடத்தின் அடிப்படையில் அல்லாமல், சேத அடிப்படையில், இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

