UPDATED : பிப் 27, 2025 07:17 AM
ADDED : பிப் 26, 2025 11:56 PM

திருப்பூர்: மஹா சிவராத்திரியான நேற்று, திருப்பூர் பகுதியில் உள்ள சிவாலயங்களில், நான்கு கால பூஜைகள் நடந்தன; இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டனர்.
மாசி மாதம் வரும் மஹா சிவராத்திரியில், அனைத்து சிவாலயங்களிலும், இரவு நேரம், நான்கு கால பூஜைகள் நடைபெறும். மஹா சிவராத்திரியான நேற்று, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்கள், அலகுமலை ஆதிகைலாச நாதர் கோவில் உட்பட, சிவாலயங்களில் மகா அபிேஷகம் நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு முதல் கால அபிேஷகமும், அலங்காரபூஜையும் நடந்தன. சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க, மூலவருக்கு அபிேஷகம் செய்தனர்; அலங்கார பூஜை செய்து, பன்னிரு திருமுறைகள் சுவாமிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. இரண்டாம் கால பூஜை, 9:00 மணிக்கு துவங்கி நடந்தது. மூன்றாம் கால பூஜை, மூலவர் மற்றும் லிங்கோத்பவருக்கும் ஏககாலத்தில் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள், திருவண்ணாமலை பதிகங்களை பாடி வழிபட்டனர். அதிகாலை, 3:00 மணிக்கு மேல், நான்காம் கால பூஜையும், அதிகாலை, 4:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தன.