/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பில்லாத மூணாறு ரோட்டில்... தத்தளிப்பு!: வனப்பகுதியில் தவிக்கும் வாகனங்கள்
/
பராமரிப்பில்லாத மூணாறு ரோட்டில்... தத்தளிப்பு!: வனப்பகுதியில் தவிக்கும் வாகனங்கள்
பராமரிப்பில்லாத மூணாறு ரோட்டில்... தத்தளிப்பு!: வனப்பகுதியில் தவிக்கும் வாகனங்கள்
பராமரிப்பில்லாத மூணாறு ரோட்டில்... தத்தளிப்பு!: வனப்பகுதியில் தவிக்கும் வாகனங்கள்
ADDED : டிச 29, 2025 05:34 AM

உடுமலை: முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு செல்லும் ரோட்டில், தமிழக எல்லையில், ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல், இரு புறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிக்கிறது; அடர்ந்த வனப்பகுதியில், வாகனங்கள் தவிக்கும் பிரச்னைக்கு உடனடி தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மூணாறுக்கு, உடுமலை வழியாக செல்லும் வழித்தடத்தை அதிகளவு சுற்றுலா பயணியர் பயன்படுத்துகின்றனர்.
இந்த ரோடு, ஒன்பதாறு செக்போஸ்ட்டில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்கிறது. சின்னாறு வரை, 28 கி.மீ., மாவட்ட முக்கிய ரோடு பிரிவின் கீழ், தமிழக நெடுஞ்சாலைத்துறை, உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. அதே போல், 16 கி.மீ., துாரம் உள்ள ரோடு, கேரளா மாநில அரசால் பராமரிக்கப்படுகிறது.
சுற்றுலா வாகனங்கள் மற்றும் உடுமலையிலிருந்து காய்கறிகள், மளிகை உட்பட அத்தியாவசிய பொருட்கள் மறையூர், மூணாறு, காந்தலுார் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேலும், மறையூர், கோவில்கடவு, காந்தலுார், தளிஞ்சி, கோடந்துார் உட்பட மலைவாழ் குடியிருப்பு மக்களும், அவசர மருத்துவ உதவி உட்பட அனைத்து மருத்துவ தேவைகளுக்கும் உடுமலையை சார்ந்தே உள்ளனர்.
இந்த ரோடு, ஒரு வழித்தடமாகவும், மிகவும் குறுகிய ரோடாக உள்ளதோடு, பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல், குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
மலைப்பகுதிகளில் மழை பெய்யும் போது, வெள்ள நீர் காட்டாறுகள் வழியாக, இந்த ரோட்டை கடப்பதால், ரோட்டின் இரு புறமும் மண் அரிப்பு ஏற்பட்டு, ரோட்டிற்கும், பக்கவாட்டு பகுதிக்கு பல அடி ஆழம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு இதனால், எதிர்எதிரே வாகனங்கள் வந்தால், ஒதுங்க கூட வழியின்றியும், ஒதுங்கினால், ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், வாகனங்கள் ஒதுங்கி வழிவிட முடியாத நிலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
தொடர் விடுமுறை காரணமாக, இரு நாட்களாக, பெங்களூரு, சென்னை, கோவை என பல்வேறு, மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வரும் நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில், இரு புறமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள், பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
மேலும், இந்த ரோட்டில், 18வது கி.மீ., ல் சின்னாறு அருகே அபாய வளைவு பகுதி உள்ளது. இருபுறங்களிலும் மலைச்சரிவுடன் குறுகலாக செல்லும், கொண்டை ஊசி வளைவு அமைந்துள்ளது.
பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட பக்கவாட்டு சுவர், இரும்பு தடுப்பு உடைந்துள்ள நிலையில், இப்பகுதியை ஆபத்தான முறையில் வாகனங்கள் கடந்து வருகின்றன.
கேரள மாநில பகுதியில், சின்னாறு முதல் மறையூர் வரை ரோடு புதுப்பிக்கப்பட்டு, ரோட்டின் பக்கவாட்டு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாத வகையில், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக பகுதியில் உள்ளரோட்டை புதுப்பிப்பதில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை ஒருங்கிணைப்பு இல்லாததால், இரு மாநில போக்குவரத்து பாதித்து வருவதோடு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
அடர்ந்த வனப்பகுதியில், வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வனவிலங்குகள், மனிதர்கள் என இருதரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில், அவ்வழியாக வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி, பல மணி நேரம் அடர்ந்த வனப்பகுதியில் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, உடுமலை - மூணாறு ரோட்டில், தமிழக பகுதியில் ரோடு மேம்பாட்டு பணியை மேற்கொள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே சுற்றுலா பயணியர் மற்றும் இரு மாநில மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

