/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஞாயிற்றுக்கிழமை திறங்க... மருந்து கொடுங்க!
/
ஞாயிற்றுக்கிழமை திறங்க... மருந்து கொடுங்க!
ADDED : ஜூலை 29, 2024 12:05 AM
திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் கருத்து மற்றும் புகார்களை எழுதி வைக்க, மருத்துவமனை முன்வளாகத்தில் பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
பதிவேட்டில் நோயாளி யின் உறவினர் ஒருவர், ''சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய பிரச்னைக்கு மாத மாத்திரை வாங்குவோருக்கு வாரத்தின் ஐந்து நாட்களுக்கு மட்டுமே மாத்திரை தரப்படுகிறது. திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் நிறைய உள்ளன. விடுமுறை ஞாயிற்றுக்கிழமை மட்டுமே.
எனவே, ஞாயிறு மாத்திரை வாங்கி விடலாம் என வருகிறோம். மருந்தகம் விடுமுறை என்பதால், மாத்திரை வாங்க முடியவில்லை. இதை கவனத்தில் கொண்டு, ஞாயிறன்று மருந்து வழங்க வேண்டும்,' என எழுதி வைத்துள்ளார்.
''ஞாயிறு பொது மற்றும் குழந்தைகள் பிரிவு செயல்பட வேண்டும். பல் மற்றும் கண் பிரிவுக்கு ஒரு டாக்டர் இருந்தால், நன்றாக இருக்கும்'' எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மருந்தகம் செயல்படுத்த முடியும்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்ந்து, மூன்று ஆண்டுகளாகிறது. ஐம்பதுக்கும் அதிகமாக சீனியர் டாக்டர் உட்பட, 70 பேர் உள்ளனர். செவிலியர், பணியாளர் என பல்வேறு நிலைகளில், 250க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மருந்தகத்தை முழுமையாக மூடாமல், சுழற்சி முறையில் ஓரிரு பணியாளர் அல்லது ஊழியரை கொண்டு பகுதிநேரமாக செயல்பட, மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல், பொதுப்பிரிவில் ஓரிரு டாக்டர் அல்லது செவிலியர் குழு பணியில் இருந்தால், ஞாயிற்றுக்கிழமைக்கு மருத்துவமனைக்கு வருவோர் சிகிச்சை பெற்று திரும்புவர்.