/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்துயிர் பெறுகிறது ஒரத்துப்பாளையம் அணை
/
புத்துயிர் பெறுகிறது ஒரத்துப்பாளையம் அணை
ADDED : ஆக 03, 2024 10:13 PM

திருப்பூர்:சாயக்கழிவால் பொலிவிழந்த ஒரத்துப்பாளையம் அணைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், 2.5 லட்சம் மரக்கன்றுகளை பொதுப்பணித்துறை அனுமதியுடன் நடுவதற்கு, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் தயாராகியுள்ளனர்.
ஈரோடு, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே, திருப்பூர் மாவட்டம், ஒரத்துப்பாளையத்தில் அணை கட்டப்பட்டு, 1992ல் திறக்கப்பட்டது. நொய்யலில் வெளியேற்றப்பட்ட சாயக்கழிவு சென்று, அணையில் தேங்கியதால், விவசாயம் பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் போராட்டத்தால், அணையில் தண்ணீரை தேக்க கூடாதென ஐகோர்ட் தடைவிதித்தது. 19 ஆண்டுகளாக, நொய்யலில் செல்லும் தண்ணீர், அணையில் தேங்காமல், கடந்து போய், காவிரியில் கலந்து கொண்டிருக்கிறது.
திருப்பூரில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் வந்த பின், சாயக்கழிவு வெளியேற்றம் குறைந்தது. ஒரத்துப்பாளையம் அணைக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியாக, பொதுப்பணித்துறை அனுமதியுடன், நீர்பிடிப்பு பகுதிகளில், வரும் ஐந்து ஆண்டுகளில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு களமிறங்கியுள்ளது.
முதல்கட்டமாக, இந்தாண்டு ஒரு லட்சம் மரக்கன்று நடப்படுகிறது. அதற்காக, அணைக்குள் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு, துகள்களாக அரைத்து வெளியேற்றப்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது, 'அணை நீர்பிடிப்பு பகுதியில், 800 ஏக்கர் அளவுக்கு, சீமைக்கருவேல மரங்கள் இருந்தன; அவற்றை அகற்றிவிட்டு, நாட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரத்துப்பாளையம் அணை பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக மாறும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்' என்றார்.