/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
1,500க்கு மேல் வாக்காளர்; இரண்டாக பிரியும் ஓட்டுச்சாவடி
/
1,500க்கு மேல் வாக்காளர்; இரண்டாக பிரியும் ஓட்டுச்சாவடி
1,500க்கு மேல் வாக்காளர்; இரண்டாக பிரியும் ஓட்டுச்சாவடி
1,500க்கு மேல் வாக்காளர்; இரண்டாக பிரியும் ஓட்டுச்சாவடி
ADDED : செப் 11, 2024 01:20 AM

திருப்பூர்:திருப்பூர் வடக்கு தொகுதியில் 7; பல்லடத்தில் 6; திருப்பூர் தெற்கு தொகுதியில் 3 ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்க கோட்ட அளவில் நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் அக்., 29ல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, சுருக்கமுறை திருத்தம் 2025 துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள், பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். பெயர் நீக்கம், பல்வேறுவகையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது.
சுருக்கமுறை திருத்தத்தின் ஒருபகுதியாக, 1,500க்கு மேல் வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்படுகின்றன. அந்தவகையில், திருப்பூர் வடக்கு தொகுதியில் 7, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகளில் தலா ஒன்று என புதிதாக ஒன்பது ஓட்டுச்சாவடிகளை உருவாக்க, வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம் 29ம் தேதி வெளியிடப்பட்டது.
ஓட்டுச்சாவடி வரைவு பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி பதிவு அலுவலர்கள் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான ஓட்டுச்சாவடி வரைவு பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம், சப்கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சப்கலெக்டர் சவுமியா தலைமை வகித்தார்.
திருப்பூர் வடக்கு தொகுதியில் தற்போது 379 ஓட்டுச்சாவடிகள் உள்ளன; புதிதாக 7 ஓட்டுச்சாவடிகளை உருவாக்கி, மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கையை 386 ஆக உயர்த்தவும்; இதுதவிர, 2 ஓட்டுச்சாவடிகளை இடம் மாறுதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
சோளிபாளையம் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியை, காவிலிபாளையம்புதுாருக்கும்; வேலம்பாளையத்திலிருந்து ஒரு ஓட்டுச்சாவடி சோளிபாளையத்துக்கும் இடம்மாறுதல் செய்யப்படுகிறது. சோளிபாளையத்தில் பழைய கட்டடத்திலுள்ள ஒரு ஓட்டுச்சாவடியை, அதே பள்ளி வளாகத்திலுள்ள புதிய கட்டடத்துக்கு இடம்மாறுதல் செய்யப்பட உள்ளது. பல்லடம் தொகுதியில், 1,500க்கு மேல் வாக்காளர் உள்ள, 6 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. தெற்கு தொகுதியில் மூன்று ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்குவது குறித்து, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.