/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லாங்குழி ரோடு: வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
/
பல்லாங்குழி ரோடு: வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 18, 2024 12:04 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல வார்டுகளில் குடிநீர் குழாய் பதிப்பு, சாக்கடை கால்வாய் அமைப்பது என பல்வேறு பணிகள் நடக்கிறது. இதற்காக ரோடுகள் ஆங்காங்கே தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் கூட, மூடாமல் விட்டு விடுகின்றனர்.
அவ்வகையில், எந்த நேரமும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து உள்ள பிரதான ரோடான, கே.எஸ்.சி., பள்ளி ரோடு குண்டும் குழியுமாக தாறுமாறாக உள்ளது. கடந்த, மூன்று மாதம் முன் அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்டு, பின் மூடப்பட்டது. பணிகள் நிறைவு பெற்ற நிலையிலும், தார் ரோடு போடாமல் அவல நிலையில் காட்சி தருகிறது.
தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு போன்ற பகுதிகளுக்கு செல்ல கூடிய வாகன ஓட்டிகள் பள்ளி ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர், மக்கள் பயன்படுத்தப்படும் பிரதான ரோடு, ஜல்லி கற்களாகவும், மதியம் நேரங்களில் காற்றுக்கு புழுதி கிளம்புகிறது. இதனால், வர்த்தகர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் என பலரும் சிரமப்படுகின்றனர்.
மேலும், அதே ரோட்டில் குழாயில் குடிநீர் கசிவு, ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். வாகன ஓட்டிகளை பதம் பார்க்க காத்திருக்கும் பல்லாங்குழி ரோட்டை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாநகராட்சி கமிஷனரும், மேயரும் ஒரு முறை கே.எஸ்.சி., ரோட்டில் சென்று வந்தால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் படும் அவஸ்தை என்னவென்று தெரியும்