/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி தலைவர் - செயலர் 'மோதல்'
/
ஊராட்சி தலைவர் - செயலர் 'மோதல்'
ADDED : ஜூன் 26, 2024 10:35 PM

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுார் ஊராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சாந்தாமணியும், துணைத்தலை வராக அவரது கணவர் வேலுசாமியும் உள்ளார். ஊராட்சி செயலராக உள்ள பொன்னுசாமிக்கும், ஊராட்சி தலைவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த வாரம் செயலருடன் தகராறு ஏற்பட்டதில், துணைத்தலைவர் வேலுசாமி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
செயலர் பொன்னுசாமி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்துள்ளார். ஊராட்சி தலைவர் சாந்தாமணி, செயலரின் பணி சரியில்லை; அவரை மாற்ற வேண்டும், என நேற்று மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார்.
பொன்னுசாமி கூறுகையில், ''துணைத்தலைவர் வேலுசாமி மற்றும் அவரது மகள் ஆகியோர் தான் அதிகாரம் செய்கின்றனர். பணி செய்யவில்லை என்றால் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்,'' என்றார்.
துணைத் தலைவர் வேலுசாமியிடம் கேட்டபோது, ''ஊராட்சி செயலர் பொன்னுசாமி, ஊராட்சியில் பணி செய்பவர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் போடுவதில்லை. வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார். எந்த வேலையும் நடப்பதில்லை. அலுவலக பணியாளர்களை அவதுாறாக பேசுகிறார்'' என்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், வடக்கு ஒன்றிய பா.ஜ.,வினர் மனு அளித்தனர். அதில், ''பெருமாநல்லுார் ஊராட்சியில் தலைவர், துணை தலைவர் இல்லாத நாட்களில், அவர்களது மகள், ஊராட்சி அலுவலகத்துக்கு வந்து, தலைவர் மற்றும் துணைத்தலைவர் போல் அதிகாரம் செலுத்திவருகிறார். துாய்மை பணியாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு உத்தரவிடுகிறார். இதுதொடர்பாக,'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவேண்டும்.
கடந்தாண்டு, ஏப்., 17 ம் தேதி பெருமாநல்லுார் ஊராட்சியில் கள ஆய்வு செய்ததில், முறைகேடு இருப்பதாக ஆதாரங்களுடன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊராட்சி துணை தலைவர் வேலுசாமி, பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். எனவே, துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.