/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் பிரச்னையை கண்டு கொள்ளாத ஊராட்சிகள்
/
குடிநீர் பிரச்னையை கண்டு கொள்ளாத ஊராட்சிகள்
ADDED : ஜூலை 25, 2024 10:38 PM
உடுமலை : உடுமலை ஒன்றியத்தில், மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளில், கணக்கம்பாளையம் மற்றும் பெரியகோட்டை முதன்மையாக உள்ளது. நகரின் எல்லையையொட்டியுள்ள ஊராட்சிகளாகவும் உள்ளன.
திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், இவ்விரண்டு ஊராட்சிகளிலும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால், இரண்டு ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தொடர்கிறது.
குடியிருப்புகளுக்கு ஏற்ப, சுழற்சி முறையில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் பத்து நாட்களுக்கு ஒருமுறையாகவும், மிக குறைவான நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் இருப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கணக்கம்பாளையம் ஊராட்சி மக்கள் கூறியதாவது: குடிநீர் வினியோகம் சில நாட்களில், தொடர்ந்து இரண்டு நாட்கள் விடப்படுகிறது. சில வாரம் பத்து நாட்கள் ஆனாலும் குடிநீர் வருவதற்கு காத்திருக்க வேண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகமும் இப்பிரச்னைக்கு முறையான தீர்வு காணாமல் உள்ளது.
மேலும், சில நேரம் நள்ளிரவு 2:00 மணி அளவில் குடிநீர் விடுகின்றனர். இவ்வாறு வினியோகிக்கும் போது மறுநாள் தான் அறிய முடிகிறது.
பத்து நாட்களுக்கும் மேலாக, குடிநீரை வைத்து பயன்படுத்தவும் முடிவதில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
பெரியகோட்டை பகுதி மக்கள் கூறியதாவது:
குடிநீர் வினியோகம் ஒரு வாரத்துக்கு அதிகமான இடைவெளியில் தான் வழங்கப்படுகிறது. அதுவும் மிக குறைவான நேரம் மட்டுமே, வினியோகிக்கப்படுகிறது.
குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. குடிநீர் சுத்திகரிக்கப்படாமல்தான் வருகிறது. குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஏழை எளிய குடும்பங்கள் எத்தனை நாள் குடிநீர் விலைக்கு வாங்க முடியும். சீரான குடிநீர் வினியோகம் வேண்டும். இவ்வாறு கூறினர்.

