/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., பொதுக்கால்வாய் புதுப்பிக்கும் பணி பாசனத்திற்கு நீர் திறக்க ஆயத்தம்
/
பி.ஏ.பி., பொதுக்கால்வாய் புதுப்பிக்கும் பணி பாசனத்திற்கு நீர் திறக்க ஆயத்தம்
பி.ஏ.பி., பொதுக்கால்வாய் புதுப்பிக்கும் பணி பாசனத்திற்கு நீர் திறக்க ஆயத்தம்
பி.ஏ.பி., பொதுக்கால்வாய் புதுப்பிக்கும் பணி பாசனத்திற்கு நீர் திறக்க ஆயத்தம்
ADDED : ஆக 09, 2024 01:00 AM

உடுமலை;பி.ஏ.பி., பாசனத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க, பொதுக்கால்வாய் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இரு மாவட்ட பாசன நிலங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, 1.2 கி.மீ., நீளம் உள்ள பொது கால்வாய் வழியாக நீர் திறக்கப்படுகிறது. அதற்கு பின், இடது புறம் பிரதான கால்வாயும், வலது புறம் உடுமலை கால்வாயும் பிரிகிறது.
பாசனத்திற்கு ஆதாரமாக உள்ள பொதுக்கால்வாய், 57 ஆண்டுகளான நிலையில், வலுவிழந்தும், அதிகளவு நீர்க்கசிவு மற்றும் நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பாசனத்தின் ஆரம்ப பகுதியான பொதுக்கால்வாயை சீரமைக்க வேண்டும், என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, இக்கால்வாயை புதுப்பிக்க, ரூ. 8 கோடி ஒதுக்கப்பட்டு, திருமூர்த்தி அணை முதல், 500 மீட்டர் வரை ஒரு பகுதியாகவும், 500 மீட்டர் முதல், 1,200 மீட்டர் வரை, இரண்டாம் பகுதியாகவும் பிரித்து, கடந்த, இரு மாதத்திற்கு முன் பணிகள் துவங்கின.
பழைய கட்டுமானங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, அணை முதல், 500 மீட்டர் நீளம் உள்ள கால்வாய், முழுமையாக கம்பி கட்டப்பட்டு, கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டாம் பகுதியில், கான்கிரீட் அமைத்து, அதற்கு மேல், கருங்கற்கள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.
அதிகாரிகள் கூறுகையில்,' வரும், 19ம் தேதி, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திட்டமிட்டுள்ளதால், பொதுக்கால்வாய் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. விரைவில் பணி நிறைவு செய்யப்படும்,' என்றனர்.