ADDED : செப் 03, 2024 01:26 AM

பல்லடம்பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் கட்டப்பட்டுள்ள நிலையில், 'டிஸ்போசல் பாய்ன்ட்' இல்லாததால் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் வீதியில் தேங்கி நிற்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுக்கு முன் கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது. இதனால், கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், கால்வாய் பணி முடிக்கப் பட்ட நிலையில், 'டிஸ்போசல் பாய்ன்ட்' இல்லாமல், கழிவு நீர் சென்றடைய வழியில்லாத சூழல் ஏற்பட்டது.
இதனால், கால்வாய் நிரம்பி வழிந்து, வீதியில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி, இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. பருவமழை துவங்கியுள்ளதால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீதி முழுவதும் தேங்கி நிற்கிறது.
அதில், பெண்கள், வயதானவர்கள் பலர், தவறி விழுந்து காயமடைகின்றனர். கழிவுநீர் கால்வாய் பணியை முழுமையாக முடித்து தருமாறு ஊராட்சி நிர்வாகம் உட்பட, கலெக்டர் வரை மனு அளித்துள்ளோம். ஆனால் யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும், என்றனர்.