/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் முடிவு எதிர்பார்த்து கட்சியினர்! செல்வாக்கை உயர்த்தாத நிர்வாகிகளுக்கு 'கல்தா?'
/
தேர்தல் முடிவு எதிர்பார்த்து கட்சியினர்! செல்வாக்கை உயர்த்தாத நிர்வாகிகளுக்கு 'கல்தா?'
தேர்தல் முடிவு எதிர்பார்த்து கட்சியினர்! செல்வாக்கை உயர்த்தாத நிர்வாகிகளுக்கு 'கல்தா?'
தேர்தல் முடிவு எதிர்பார்த்து கட்சியினர்! செல்வாக்கை உயர்த்தாத நிர்வாகிகளுக்கு 'கல்தா?'
ADDED : ஜூன் 04, 2024 12:56 AM
திருப்பூர்;லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், ஆளுங்கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்; வெற்றி வாய்ப்புக்கு கைக் கொடுக்காத நிர்வாகிகளுக்கு, கட்சித்தலைமை, 'கல்தா' கொடுக்கும் என்ற பேச்சு, கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வாக்காளர்கள், பொது மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லோக்சபா தேர்தல் முடிவு, இன்று வெளியாகிறது. 6 சட்டசபை உள்ளடக்கிய லோக்சபா தொகுதிக்கான தேர்தல் களம் என்றாலும், வார்டு அளவிலான அரசியலில் கூட இது எடுபடும் என்பதுதான், அரசியல் கணக்கு.
ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி சார்பில் பூத் கமிட்டி அமைத்து, அதற்கு பொறுப்பாளர்களை நியமித்தன. கிளை, நகரம் மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள்; மாவட்ட நிர்வாகிகள் என, கட்சியை வளர்க்க நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அவர்களின் செயல்பாடு, கட்சியை வளர்க்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி, அவர்களது முயற்சியால் ஒவ்வொரு பூத் வாரியாக கிடைத்த ஓட்டு விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கட்சித்தலைமை சேகரிக்க இருக்கிறது.
அதனடிப்படையில் தான், கட்சி வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம், வரவுள்ள தேர்தலில் ஓட்டு பெறுவதற்கான வியூகம் வகுக்கப்படும் என்ற நிலையில், இந்த தேர்தல் முடிவுகள், கட்சி நிர்வாகிகளின் அரசியல் தலையெழுத்தை மாற்றியமைக்கப் போகிறது.
வரும், 2026ல் நடைபெறுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு, இந்த லோக்சபா தேர்தல் ஒரு வெள்ளோட்டம் என கருதப்படுவதால், இன்று வெளியாகும் தேர்தல் முடிவு, கட்சிகளின் கிளை நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகளின் எதிர்கால அரசியல் பயணத்துக்கு துணை புரியும் என்பதால், கட்சி நிர்வாகிகள் தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
காரணம் தேடும் நிர்வாகிகள்!
திருப்பூர் நகர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் தி.மு.க.,வை பொறுத்தவரை கோஷ்டி பூசல் உச்சம் தொட்டிருக்கிறது; கட்சி நிர்வாகிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாதது. கூட்டணி கட்சி களை அரவணைத்து செல்லாதது; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி என்பது போன்ற பல காரணங்கள், இந்த தேர்தலில் எதிரொலிக்க உள்ளன.
எனவே, ஓட்டு குறைவதற்கான காரணங்களை பட்டியலிட்டு, கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்ல நிர்வாகிகள் பலர் தயாராகி வருகின்றனர். திருப்பூரை பொருத்தவரை அ.தி.மு.க., - தி.மு.க., இடையே தான் நேரடி போட்டி இருக்கும் என்ற நிலையில் இம்முறை, பா.ஜ., வலுவான போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.
அக்கட்சி தலைமைகளும், தங்களுக்கான ஓட்டு வங்கி எந்தளவு உயர்ந்திருக்கிறது என்பதை கவனித்து, கணிக்கிட்டு, உட்கட்சி நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த தயாராக உள்ளன.