/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோரிக்கைகளை அடுக்கிய மக்கள்; தீர்வு காண்பார்களா அதிகாரிகள்!
/
கோரிக்கைகளை அடுக்கிய மக்கள்; தீர்வு காண்பார்களா அதிகாரிகள்!
கோரிக்கைகளை அடுக்கிய மக்கள்; தீர்வு காண்பார்களா அதிகாரிகள்!
கோரிக்கைகளை அடுக்கிய மக்கள்; தீர்வு காண்பார்களா அதிகாரிகள்!
ADDED : ஆக 06, 2024 06:50 AM

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், சப்-கலெக்டர் சவுமியா உள்ளிட்டோர் மனுக்களை பெற்றனர். பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு கொடுத்தனர். கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து, கலெக்டர் ஆய்வு செய்தார்; விரைந்து தீர்வு காணுமாறு, அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
பெருமாநல்லுார் பொதுமக்கள்: பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், புதிய திருப்பணி துவங்க ஆயத்தமாகி வருகிறோம். கோவில் அருகே, திருமண மண்டபம் கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவிழாக்காலங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குண்டம் திருவிழா நடத்துவதால் லட்சக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். எனவே, திருமண மண்டபம் கட்டும் முடிவை கைவிட வேண்டும். கோவில் அருகே மண்டபம் கட்டினால், வழிபாட்டு முறைகளும் பாதிக்கும். மாறாக, கோவிலை விரிவுபடுத்தி, ராஜகோபுரம் கட்ட வேண்டும்.
பல்லடம் சமூக அலு வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை: விவசாயிகள் பயன்பெறும் வகையில், குளம், குட்டைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுப்பட்டி, கரடிவாவி, சின்னக்குட்டை, மந்தநாய்க்கன்பாளையம் குட்டைகளில், முறைகேடாக கிராவல் மண் எடுக்கின்றனர். ஊராட்சி நிர்வாகமும், டோக்கன் வழங்கி மண் எடுக்க அனுமதிப்பதை விசாரிக்க வேண்டும். வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
இடுவம்பாளையம் பகுதி மக்கள்: திருப்பூர் மாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்டது இடுவம்பாளையம், ஜெ.கே., அவென்யூ பகுதி. குடிநீர் இணைப்பு மட்டும் உள்ளது; இருப்பினும், சீரான வினியோகம் இல்லை. ரோடு வசதி, தெருவிளக்கு, பாதாள சாக்கடை வசதிகளை செய்ய வேண்டும்; ஆக்கிரமிப்பை அகற்றி, ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும்.
தி.மு.க., தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் ரவி: மாநகராட்சியில், சனிக்கிழமைதோறும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வந்தது; தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மங்கலம் ரோட்டில், ஆண்டிபாளையம் வரை ஆக்கிரமிப்பு அகற்றினர். ஆண்டிபாளையம் முதல் இடுவம்பாளையம், முருகம்பாளையம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு எடுக்கவில்லை. போக்குவரத்து பாதிப்பால், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.
கொ.ம.தே.க., தொழிற்சங்க மாவட்ட செயலாளர் செந்தில்: கொங்கு நகர் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் வசதிக்காக, காலை மற்றும் மாலை நேரம், கொங்கு மெயின் ரோடு வழியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
அவிநாசி, செம்பியநல்லுார் ஸ்ரீசாய் கார்டன் மக்கள்: எங்கள் பகுதிக்கு செல்லும் பொது வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்; ஊராட்சிகள் சட்டப்படி, ஆக்கிரமிப்பை அகற்றி, பொது பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும்.
நல்லுார் பகுதி மக்கள்: நல்லுார் பஸ் ஸ்டாப் அருகே, மதுக்கடை மற்றும் பார் அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. கோவில், சுகாதார நிலையம், சர்ச் மற்றும் கடைகள் அதிகம் உள்ளன. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மதுக்கடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது; தடுக்க வேண்டும்.