ADDED : ஆக 14, 2024 11:24 PM
''நாணயத்திற்கு மட்டும் மதிப்பளித்து, நாணயத்தை புதைத்து நடைபெறும் ஒவ்வொரு வணிகமும், அறமற்ற வணிகமே; அவர் அறமற்ற வணிகரே,' என்கிறார், மகாத்மா காந்தி.
திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாஷா கூறியதாவது:
'அறிந்திரு, விழித்திரு, செயல்படு!' என்ற விழிப்புணர்வு முழக்கத்தை, நுகர்வோர் அமைப்புகள் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. நுகர்வு கலாசாரத்தில் தங்களின் உரிமைகளை மக்கள் இழந்துவிடக் கூடாது.
பொட்டலமிடப்பட்ட உணவு பண்டங்களில், தயாரிப்பாளர் முகவரி, சில்லரை விற்பனை விலை, தயாரிப்பு நாள், காலாவதி தேதி, அதில் உள்ள சத்துகளின் அடக்க அளவீடு உட்பட விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். உணவுப் பொருட்களில் உணவு பாதுகாப்பு துறையின் முத்திரை இடம் பெற்றிருக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்தி, நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் குறித்த சரியான விவரங்களை கேட்டுப் பெறும் உரிமை நுகர்வோருக்கு உண்டு. கலப்படம், போலி, தரமின்மை உள்ளிட்ட முறைகேடுகளால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிடவும், நுகர்வோர்சட்டம் வகை செய்கிறது.