sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எட்டு இடங்களில் மறியல்:கம்யூ., கட்சிகள் முடிவு

/

எட்டு இடங்களில் மறியல்:கம்யூ., கட்சிகள் முடிவு

எட்டு இடங்களில் மறியல்:கம்யூ., கட்சிகள் முடிவு

எட்டு இடங்களில் மறியல்:கம்யூ., கட்சிகள் முடிவு


ADDED : ஜூலை 28, 2024 11:44 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:மத்திய பட்ஜெட்டை கண்டித்து, திருப்பூர் மாவட்டத்தில், எட்டு இடங்களில் சாலைமறியல் நடத்த, கம்யூ., கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்தது. மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்; மா.கம்யூ., கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் இசாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அரசு பட்ஜெட், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஏழைகளுக்கு துன்பம் அளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. வரும் ஆக., 1ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய எட்டு இடங்களில், சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

---

நுழைவுக்கட்டணம் ரத்து கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 29-

கோவில்களில் நுழைவுக் கட்டணம் ரத்து செய்ய வேண்டும்; தமிழக அரசு உயர்த்திய பத்திரப்பதிவு கட்டணம், மின் கட்டண உயர்வு திரும்ப பெற வேண்டும். முன்னாள் நீதிபதி சந்துரு அளித்த ஒரு நபர் கமிஷன் பரிந்துரைகள் நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி திருப்பூர், குமரன் சிலை முன்புறம், ஹிந்து பாரத் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயல் தலைவர் பாலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜ், பொதுச்செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஜெய்மணி மாறன், குணசேகரன், மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். இதில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

---

சுங்கம் வசூலுக்கு எதிர்ப்பு

திருப்பூர்:

ஞாயிற்றுக்கிழமைகளில், 15 வேலம் பாளையம் பஸ் ஸ்டாப் அருகிலும், வியாழக்கிழமைகளில் அனுப்பர்பாளையம் சாமிநாதபுரம் ரோட்டோரத்திலும் சிறு வியாபாரிகள் கடை அமைத்து பொருட்களை விற்கின்றனர்.

மா.கம்யூ., கட்சியின் 15 வேலம் பாளையம் நகர செயலாளர் நந்தகோபால் கூறுகையில், ''அனுப்பர்பாளையம் வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் வசூல் செய்ய மாநகராட்சி சார்பில், தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் 'மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளது' எனக் கூறி, 15 வேலம் பாளையம் மற்றும் சாமிநாதபுரம் ஆகிய பகுதியில் ரோட்டோர வியாபாரிகளிடமும் வசூல் செய்கின்றனர். வியாபாரிகளிடம் வசூல் செய்வது தொடர்ந்தால், வியாபாரிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.

---

தக்காளி வரத்து அதிகரிப்பு

விலை சரிவை நோக்கி...

திருப்பூர், ஜூலை 29-

திருப்பூரில் உள்ளூர் தக்காளியுடன், வெளிமாநில தக்காளியும் லாரிகளில் வந்து குவிகிறது. தென்னம்பாளையம், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கு மொத்தமாக, 220 டன் தக்காளி வருவதால், மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி, 30 ரூபாயாக குறைந்துள்ளது.

மளிகை, காய்கறி கடைகளில் கிலோ, 35 முதல், 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாலையோரங்களில் மூன்றரை கிலோ, 100 ரூபாய்க்கு கூவிகூவி விற்கப்படுகிறது. விலை சரிவு, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் மட்டுமே நடப்பதால், காய்கறி விற்பனை மந்தமாக உள்ளது. தக்காளி வழக்கத்தை விட குறைவாக விற்கும் நிலையில், வரத்து வந்து கொண்டே இருப்பதால், விலை குறைந்து கொண்டே இருக்கிறது. மொத்த விலையில், 14 கிலோ சிறிய கூடை, 400 ரூபாய், 26 கிலோ பெரிய கூடை, 750 ரூபாய்க்கு விற்கிறோம். இன்னும் விலை சரியலாம்,' என்றனர்.

---

நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம்

திருப்பூர்:

திருப்பூரில் உள்ள தொழில் பாதுகாப்பு குழு அலுவலகத்தில் நேற்று பாரதிய மஸ்துார் சங்க(பி.எம்.எஸ்.,) புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், அகில பாரத கணக்கு தணிக்கை பிரிவு பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், மாநில செயலாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மாநில துணை தலைவர் பிரபு, மாவட்ட செயலாளர் மாதவன், செயல் தலைவர் செந்தில், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்கச் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

----

நிர்வாகிகள் ஆலோசனை

திருப்பூர்:

முக்குலத்தோர் தேசிய கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருப்பூரில் உள்ள அதன் மாநில தலைமை அலுவலகத்தில், அதன் நிறுவனர் ராஜா தலைமையில் இக்கூட்டம் நடந்தது. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் விஜயகண்ணன், அழகுராஜா முன்னிலை வகித்தனர். அமைப்பின் வளர்ச்சி, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், முக்குலத்தோர் சமுதாய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசனை நடந்தது. முருகன் நன்றி கூறினார்.

---

மக்கள் சந்திப்பு இயக்கம்

திருப்பூர், ஜூலை 29-

பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கோரி மா.கம்யூ., கட்சி சார்பில், திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில், ராக்கியாபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் பகுதிகளில், மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. ராக்கியாபாளையத்தில் நடந்த கூட்டத்துக்கு, கிளை செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.

திருப்பூர் நகரப்பகுதியில் நான்கு இடங்களிலும், வேலம்பாளையம் பகுதியிலும், செங்கப்பள்ளி ஊராட்சி கிளை சார்பிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. ஒவ்வொரு பகுதிகளின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.

---

மண்டல மேலாளர் நியமனம்

திருப்பூர்:

அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளராக இருந்தவர், மாரியப்பன், 59. பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பாக, கடந்த, மே, 30ம் தேதி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். டிரைவர், நடத்துனர் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கோவை கோட்ட தொழில்நுட்ப மேலாளர் செல்வக்குமார், திருப்பூர் மண்டல பொது மேலாளராக தற்காலிக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், சென்னை, 2, விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) துணை மேலாளராக இருந்த சிவக்குமார், திருப்பூர் மண்டல பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திருப்பூர் மண்டலத்துக்கு கீழ் உள்ள திருப்பூர் 1 மற்றும் 2 கிளை, பல்லடம், காங்கயம், உடுமலை, பழநி, 1, பழநி 2, தாராபுரம் ஆகிய எட்டு கிளைகளை நிர்வகிப்பார்.

---

மதுக்கடைக்கு எதிர்ப்பு

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 48 வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:

நல்லுார் பஸ் ஸ்டாப் அருகே, புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதி. அருகிலேயே கோவில், சர்ச், ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் உள்ளன. இப்பகுதியில் மதுக்கடை அமைத்தால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும். எனவே மதுக்கடை அமைக்கக்கூடாது.

----

மீன் விற்பனை மந்தம்

திருப்பூர்:

தமிழக கடலோரம், ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 60 டன் கடல் மீன்கள் விற்பனைக்காக வந்தன. மழைப்பொழிவு, நீர் வரத்து அதிகரிப்பால், ஆழியார், பவானிசாகர், மேட்டூரில் இருந்து அணை மீன் வரத்து ஐந்து டன்னாக குறைந்தது. ஆடி மாத பிறப்பால் கடந்த வாரம் மீன் விற்பனை குறைந்திருந்தது. நேற்று, தேய்பிறை அஷ்டமி, நாளை மறுதினம் ஆடிக்கிருத்திகை என்பதால், நேற்றும் மீன் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை. அதேசமயம், மொத்த வியாபாரிகள் மீன்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர். மாலை வரை மீன்கள் விற்பனையாகாமல் இருந்தன.

---

யுவசேனாவில் ஐக்கியம்

திருப்பூர்:

திருப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள் 30 பேர் சிவசேனா அமைப்பின் இளைஞர் அணியான யுவ சேனாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.சிவசேனா அமைப்பின் மாநில இளைஞர் அணி தலைவர் திருமுருக தினேஷ் முன்னிலையில், அக்கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ஆதியூரைச் சேர்ந்த ரமேஷ் தலைமையில் 30 இளைஞர்கள் யுவசேனா அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

---

ரேக்ளாவில் சீறிய காளைகள்

திருப்பூர், ஜூலை 29-

தாராபுரத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் ரேக்ளாவில் பூட்டிய காளைகள் சீறிப் பாய்ந்தன. கருணாநிதி நுாற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, மூலனுார் நகர தி.மு.க., சார்பில், ரேக்ளா போட்டி நடந்தது. ஈரோடு எம்.பி., பிரகாஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் இதைத் துவக்கி வைத்தனர். மூலனுார் நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் துறை தமிழரசு, கார்த்திக், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் கோவை, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. பூச்சிக்காளை, காங்கயம் காளை உள்ளிட்ட காளையினங்கள் பூட்டிய ரேக்ளா வண்டிகள் 200 மற்றும் 300மீ., ஆகிய போட்டிகளில் பங்கேற்றன. பார்வையாளர்கள் பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். முதல் பரிசாக எலக்ட்ரிக் பைக் மற்றும் தங்க நாணயம், கேடயம், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

----

தென்னை வாடல் நோய்: விவசாயிகள் வாட வேண்டாம்

திருப்பூர், ஜூலை 29-

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், வேளாண் துறை சார்பில், தென்னையை தாக்கும் நோய்கள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி தென்னை மரங்களில் கேரள வேர்வாடல் நோய் பரவுகிறது. இந்த நோய் தாக்கத்துக்கு பைட்டோ பிளாஸ்மா என்ற நுண்ணுயிரியே காரணியாக உள்ளது. மட்டைகளின் மேல் பகுதி மஞ்சள் நிறமாவது முதல் அறிகுறி.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால், மரங்களை காப்பாற்றிவிடலாம். அடுத்தடுத்த நிலைகளில், ஓலைகளின் ஓரங்கள் கருகுவது, மரம் எலும்புக்கூடு போல் ஆவது என, நோய் தாக்கம் தீவிரமாகும். நுனி குருத்து அழுகல், பூங்கொத்து கருகுவது, குரும்பை உதிர்ந்து, காய்ப்பு திறனை இழக்கும்.

நோய் பாதித்த முதல் இரண்டு நிலைகளுக்குள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, தென்னயை பாதுகாக்கமுடியும். மூன்றாவது, நான்காவது நிலைகளுக்கு சென்றுவிட்டால், காப்பாற்றுவது கடினம்; அத்தகைய மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதே நல்லது.

இவ்வாறு, அவர் பேசினார்.

என்ன செய்ய வேண்டும்?

''ஒருங்கிணைந்த வாடல் நோய் மேலாண்மை மூலம், வேர்வாடல் நோய் பாதித்த தென்னைகளை காப்பாற்றலாம். மக்கிய சாண உரம் 50 கிலோ; வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ; பூரியா 1.3 கிலோ; சூப்பர் பாஸ்பேட் 2 கிலா; மூரியேட் ஆப் பொட்டாஷ் 3.5 கிலோ கலவையை, ஒரு மரத்துக்கு, ஓராண்டுக்கு வைக்கவேண்டும்.

ஒரு மரத்துக்கு டிரைகோ டெர்மா அஸ்பரெல்லம் - 100 கிராம்; பேசில்லஸ் சப்டிலிஸ் 100 கிராம்; அசோஸ்பைரில்லம் 100 கிராம்; பாஸ்போ பாக்டீரியா 100 கிராம்; வேர் உட்பூசணம் 50 கிராம் வீதம், மக்கிய தொழு உரத்துடன் சேர்த்து, வேர் பகுதியில் இடவேண்டும். 40 மி.லி., தென்னை டானிக்கை 160 மி.லி., தண்ணீரில் கலந்து வைக்கவேண்டும். உர நிர்வாகம் மூலம், மண்ணை வளப்படுத்துவது மிகவும் அவசியம்'' என்றனர் வேளாண் அதிகாரிகள்.

----

17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிர்ணயச் சான்றிதழ்

திருப்பூர், ஜூலை 29-

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, நான்கு ஆண்டுகளில், 17 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாடு முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் மருத்துவ சேவை மற்றும் தரம் ஆகியவை குறித்து மதிப்பிடுகிறது. படுக்கை வசதி, மருத்துவ சேவை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவை குறித்து நோயாளிகளிடமே கருத்து கேட்டு, நுாற்றுக்கு எவ்வளவு மதிப்பெண் என கணக்கிடப்படுகிறது.

எழுபது மதிப்பெண்களுக்கு மேல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் பெற தகுதியுடையவையாக கருதப்படுகிறது. இச்சான்றிதழ் பெறும் மையத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி மேம்பாட்டு பணிகளுக்கென வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், மங்கலம், குள்ளம்பாளையம், உடுமலை, மூலனுார், கொடுவாய், பொன்னாபுரம், பச்சாபாளையம், பூளவாடி, உப்பிலிபாளையம், பெதப்பம்பட்டி, செம்மிபாளையம், செல்லம்பாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், பெரியாண்டிபாளையம், தாயம்பாளையம், சூசையாபுரம், கோவில்வழி, சுண்டமேடு ஆகிய மாநகராட்சி சுகாதார மையங்கள் என, மொத்தம், 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் பெற்றுள்ளன.

கூடுதல் மருத்துவ வசதிகள்

கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. முன்பு, கிராம சுகாதார செவிலியர், துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் நோயாளிகள் கவனிக்கப்பட்டு, உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர். தற்போது

கிராம அளவிலேயே கூடுதல் மருத்துவ வசதிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை, ஆய்வகம், அவசர பிரசவ அறுவைசிகிச்சை உள்ளிட்ட வசதி படிப்படியாக கொண்டு வரப்பட்டு வருகிறது. அவ்வாறு சிறப்பாக பணியாற்றி, சேவை வழங்கி, 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தான் விருதுகள் கிடைத்துள்ளன. வீரபாண்டி, மேட்டுப்பாளையம், வெள்ளிரவெளி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடப்பாண்டுக்குள் சான்றிதழ் பெற காத்திருக்கின்றன.

- மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்.

----------------

நஞ்சப்பா பள்ளி ரோடு ஞாயிறு தினத்தில் விழா கோலம்

பனியன் ஆடை விற்பனை களைகட்டுகிறது

திருப்பூர், ஜூலை 29-

காதர்பேட்டை அருகே, நஞ்சப்பா பள்ளி ரோட்டில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் பனியன் ஆடை சில்லரை விற்பனை களைகட்டுகிறது.

திருப்பூர் காதர்பேட்டை, பின்னலாடைத் தொழிலுக்கு இருதயம் போன்றது. ஏற்றுமதி நிறுவனங்களில் உபரியாகும் ஆயத்த ஆடைகள், மொத்த விற்பனை இங்குதான் நடக்கிறது. மும்பை, ராஜஸ்தான், டில்லி, ஆமதாபாத், சூரத், ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு தேவையான ஆடைகளும் இங்குதான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இயங்கும் உற்பத்தியாளர்களிடம், ஆர்டர் கொடுத்து, பின்னலாடைகள் தயார் செய்யப்படுகின்றன. அவை, காதர்பேட்டையில் உள்ள கடைகள் வாயிலாக, மொத்த விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் மட்டுமே, சில்லரை விற்பனை நடக்கிறது.

சிறிய கடைகள் அல்லது வீடுகளிலேயே, சில இயந்திரகளைக் கொண்டு, பின்னலாடை தயாரிக்கும் யூனிட்களும் ஏராளமானவை உள்ளன. உள்ளன. ஆண்களுக்கான உள்ளாடைகள், இரவுநேர ஆடைகள், விளையாட்டு ஆடைகள், சிறுவர், சிறுமியருக்கான ஆடைகள், பெண்களுக்கான இரவு நேர ஆடைகள் என, பல்வகை ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

அவற்றை, சில்லரை விற்பனை செய்யும் வியாபாரிகள் வாங்கி, விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூர் பகுதியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை, ஆடைகளை வாங்குவதற்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதற்காக, காதர்பேட்டையைச் சுற்றி வருகின்றனர். காதர்பேட்டைக்கு வரும் வெளியூர் மக்களும், தேவையான பின்னலாடைகளை வாங்கிச்செல்கின்றனர்.

கொரோனாவுக்கு பிறகு, சிறிய யூனிட் வைத்திருக்கும் சிறு உற்பத்தியாளர்களும், பின்னலாடை வியாபாரிகளும், காதர்பேட்டை சுற்றுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடை விரித்து, விற்பனை செய்கின்றனர்.

நாளுக்கு நாள், ஞாயிற்றுக்கிழமை சில்லரை விற்பனை அதிகரித்து வந்ததால், காதர்பேட்டையில் உள்ள மொத்த வியாபாரிகளும், ஞாயிற்றுக்கிழமை மட்டும், சிறிய பெல்ட் கட்டிலை விரித்து, சில்லரை விற்பனை செய்யவும் தயாராகிவிட்டனர். நஞ்சப்பா பள்ளி முதல், காதர்பேட்டை பள்ளி வரை, ஞாயிற்றுக்கிழமை, தேர்வீதி போல் மாறிவிடுகிறது.

குறு, சிறு பனியன் வியாபாரிகள், ஞாயிற்றுக்கிழமை மட்டும், குடும்ப சகிதமாக வந்து, கடை விரித்து, ஆடை விற்பனை நடத்த துவங்கிவிட்டனர். இதன் காரணமாக, திங்கட்கிழமை கூட விடுமுறை எடுத்து இளைப்பாறுகின்றனர்.

'ஸ்மார்ட் சிட்டி' ரோடு அமைத்த பிறகு, பிளார்ட்பாரம் ஓரத்தில் பெல்ட் கட்டில்களை விரித்து, ஆடை விற்பனை நடப்பது அதிகமாகிவிட்டது. காதர்பேட்டை என்பது, மொத்த பின்னலாடை விற்பனைக்கு பெயர்போன இடம் என்ற நிலைமாறிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை சென்றால், குழந்தைகள், சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள், பெண்கள் என, அனைவருக்குமான பின்னலாடைகளை 20 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையிலான மலிவு விலையில் அள்ளிச்செல்லலாம் என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

பனியன் மார்க்கெட் என்னாச்சு?

திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவது போல், விற்பனைக்கு உதவ யாரும் தயாரில்லை. கடந்த, 40 ஆண்டுகளாக பின்னலாடை தொழில் கொடிகட்டி பறந்தாலும், உள்ளூரில் பின்னலாடை(பனியன்) மார்க்கெட் இல்லை. மாநகராட்சி அல்லது அரசு சார்பில், பனியன் மார்க்கெட் அமைத்து, குறு, சிறு வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. ஒருங்கிணைந்த பனியன் மார்க்கெட் அமையும் போது, எப்பகுதி மக்களாக இருந்தாலும், நேரில் வந்து, தேவையான பனியன் ஆடைகளை வாங்கி செல்ல ஏதுவாக இருக்கும்; குறு, சிறு வியாபாரிகளும் பயன்பெறுவர்.

---

தேசிய கேரம் போட்டி துவக்கம்

திருப்பூர், ஜூலை 29-

கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி,மு.க., மாணவர் அணி, முத்தம்மாள் அறக்கட்டளை ஆகியன இணைந்து, முத்தம்மாள் மற்றும் திலகமணி நினைவு கோப்பைக்கான, அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டிகளை நடத்துகின்றன.

ராமசாமி - முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்த துவக்க விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் திலகராஜ் தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் நாகராஜன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலை வகித்தனர்.பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கேரம் வீரர்கள், ஆர்வலர்கள் என 320 பேர் பங்கேற்றுள்ளனர். உலகச் சாம்பியன் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தீப் திலே; ஆசிய சாம்பியன் முகமது குப்ரான்; அமெரிக்காவில் நடைபெறும், உலக கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்கவுள்ள வீராங்கனைகள் ஹாசிமா மற்றும் மித்ரா; முன்னாள் உலக சாம்பியன்கள் 15 பேர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய்; 2வது பரிசு 50 ஆயிரம் ரூபாய்; 3வது பரிசு 25 ஆயிரம் ரூபாய்; 4வது பரிசு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்; கோப்பைகள் உண்டு. முதல் பரிசு பெறுபவருக்கு திருப்பூர் மாவட்ட கேரம் சங்கம் ஒரு பவுன் தங்க நாணயம்; 2,3 மற்றும் 4வது பரிசாக தலா அரைப் பவுன் தங்க நாணயம் வழங்குகிறது.

தமிழ்நாடு கேரம் சங்க தலைவர் நாசர் கான், தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயம், மகாராஷ்டிரா கேரம் சங்க செயலாளர் அருண் கேதர், தமிழ்நாடு கேரம் சங்க சீனியர் துணைத் தலைவர் சிவக்குமார், திருப்பூர் மாவட்ட சங்க தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்றும் போட்டி நடக்கிறது.

---

பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர்

விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர், ஜூலை 29-

பள்ளபாளையம் குளத்துக்கு, தண்ணீர் திறக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சாமளாபுரம் பேரூராட்சி எல்லையில், பொதுப்பணித்துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளபாளையம் குளம் உள்ளது. சாமளாபுரம் குளம் நிறைந்ததும், உபரிநீர் வாய்க்கால் வழியாக இக்குளத்துக்கு வந்து சேர்க்கிறது. இக்குளம் நிறைந்தால், உபரிநீர் மீண்டும் நொய்யலை சென்றடைகிறது.

களிமண் பூமி என்பதால், சாமளாபுரம் குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது; செந்தேவிபாளையத்தில் இருந்து வரும் வாய்க்காலில், நொய்யல் ஆற்று தண்ணீரும் வந்து சேர்கிறது. குளம் நிறையும் தருவாயில் இருப்பதால், பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'மேற்கு ரோட்டரி சார்பில், சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளம் துார்வாரி ஆழப்படுத்தப்பட்டது. சாமளாபுரம் குளத்தில் தண்ணீர் அதிகம் இருந்தாலும், பள்ளபாளையம் குளத்துக்கு கிடைப்பதில்லை. தற்போது குளம் நிறைய இருப்பதால், பள்ளபாளையத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். மீன்பிடி ஏலதாரர்கள், சாமளாபுரம் குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் ஷட்டரை அடிக்கடி அடைத்துவிடுகின்றனர். இதனால், இருகுளங்களுக்கும் தண்ணீர் வருவதில்லை. நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டதால், பள்ளபாளையம் குளத்தில், நொய்யல் தண்ணீரை தேக்கி வைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

யாரிடம் ஷட்டர் சாவி?

பொதுப்பணித்துறை அலுவலர்கள் அல்லது பாசன சபை விவசாயிகள் மூலம், ஷட்டர் பராமரிக்கப்பட வேண்டும். சாமளாபுரம் குளத்துக்கான ஷட்டர், மீன்பிடி ஏலதாரரின் பொறுப்பில் இருக்கிறது. ஷட்டரை திறந்தால், தண்ணீர் வரும் போது, மீன்கள் வெளியேறும் என்பதால், ஷட்டரை அடைத்து வைப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் குளத்துக்கு தண்ணீர் வழங்க தகுந்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

-------------

ஞாயிறு மருந்தகம் திறக்கப்படுமா?

நோயாளிகளின் எதிர்பார்ப்பு

திருப்பூர், ஜூலை 29-

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் கருத்து மற்றும் புகார்களை எழுதி வைக்க, மருத்துவமனை முன்வளாகத்தில் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இப்பதிவேட்டில் நோயாளியின் உறவினர் ஒருவர், ''சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய பிரச்னைக்கு மாத மாத்திரை வாங்குவோருக்கு வாரத்தின் ஐந்து நாட்களுக்கு மட்டுமே மாத்திரை தரப்படுகிறது. திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் நிறைய உள்ளன. விடுமுறை ஞாயிற்றுக்கிழமை மட்டுமே. எனவே, ஞாயிறு மாத்திரை வாங்கி விடலாம் என வருகிறோம். மருந்தகம் விடுமுறை என்பதால், மாத்திரை வாங்க முடியவில்லை. இதை கவனத்தில் கொண்டு, ஞாயிறன்று மருந்து வழங்க வேண்டும்,' என எழுதி வைத்துள்ளார்.

இதுபோன்று, ''ஞாயிற்றுக்கிழமை பொது மற்றும் குழந்தைகள் பிரிவு செயல்பட வேண்டும். பல் மற்றும் கண் பிரிவுக்கு ஒரு டாக்டர் இருந்தால், நன்றாக இருக்கும்'' என நோயாளிகள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்ந்து, மூன்று ஆண்டுகளாகிறது. ஐம்பதுக்கும் அதிகமாக சீனியர் டாக்டர் உட்பட, 70 பேர் உள்ளனர். செவிலியர், பணியாளர், ஊழியர் என பல்வேறு நிலைகளில், 250 க்கும் அதிகமான பணிபுரிகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மருந்தகத்தை முழுமையாக மூடாமல், சுழற்சி முறையில் ஓரிரு பணியாளர் அல்லது ஊழியரை கொண்டு பகுதிநேரமாக செயல்பட, மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல், பொதுப்பிரிவில் ஓரிரு டாக்டர் அல்லது செவிலியர் குழு பணியில் இருந்தால், ஞாயிற்றுக்கிழமைக்கு மருத்துவமனைக்கு வருவோர் சிகிச்சை பெற்று திரும்புவர்.

*

*






      Dinamalar
      Follow us