/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பு; குடிநீர் வினியோகம் தாமதம்
/
குழாய் உடைப்பு; குடிநீர் வினியோகம் தாமதம்
ADDED : மே 29, 2024 12:28 AM

திருப்பூர்;திருப்பூர், சின்னாண்டிபாளையம் பகுதியில், ஆண்டிபாளையம் குளம் அருகில், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுத்திகரிக்கப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர், குழாய் வழியாக, ஆண்டிபாளையம் உபரிநீர் வெளியேறும் பகுதி வரை செல்கிறது.
கடந்தாண்டு, குழாய் பதித்த போது, பாறை நிலமாக இருந்ததால், ஆழம் குறைவாக சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டது. சோதனை முறையில் தண்ணீர்விட்டு பார்த்த போது, தண்ணீர் செல்லாமல் தேங்கியது. இதன்காரணமாக, மேலும் ஒரு மீட்டர் ஆழத்துக்கு தோண்டி புதிய குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.
குளத்துக்கடை பஸ் ஸ்டாப் முதல், சின்னாண்டிபாளையம் பிரிவு வரை, ரோட்டின் வடபுறம், மிக ஆழமான குழி தோண்டி குழாய் பதிப்பு பணி நடந்து வருகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, பிரதான குடிநீர் குழாய்கள் அவ்வழியாக செல்வதால், அடிக்கடி உடைபடுகிறது.
தினமும், குழியில் தண்ணீர் தேங்கி, மோட்டார் மூலமாக உறிஞ்சி ரோட்டில் விடப்படுகிறது; இதன் காரணமாக, ரோடு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. தினமும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஆண்டிபாளையம் சுற்றுப்பகுதி மற்றும் மங்கலம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
உரிய நேரத்தில், குடிநீர் வினியோகம் செய்ய முடியாத அளவுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், குழாய் பதிப்பு பணியை போர்க்கால அடிப்படையில் முடித்து, குடிநீர் குழாய்களை சீரமைப்பதுடன், தார்ரோட்டையும் சீரமைத்து கொடுக்க வேண்டும் என்பது, பொதுமக்கள் எதிர்பார்ப்பு.