ADDED : மே 31, 2024 01:30 AM

திருப்பூர்:மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்புறம் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4வது குடிநீர் திட்டத்தில், குழாய் பதிப்பு பணிகள், வினியோக குழாய் பதிப்பு, பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிப்பு, வடிகால் அமைத்தல், புதிய ரோடு அமைத்தல் போன்ற பணிகள் பல இடங்களில் நடக்கிறது.
இப்பணிகளின் போது பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாகுதல், ரோடு சேதமடைவது போன்றவை தொடர்கதையாக நடக்கின்றன.
இதுபோன்ற குழாய் உடைப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதில்லை. இதனால், ஏற்படும் அவதி நிலை தொடர்கதையாக உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகம் முன்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து கடந்த 4 நாட்களாக குடிநீர் பெருமளவு வெளியேறி, அலுவலக பிரதான நுழைவாயிலைக் கடந்து செல்கிறது.இதனால் குடிநீர் வீணாவதோடு, வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் கடந்து செல்வதில் பெரும் அவதி நிலவுகிறது.