/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தட்டு - தானியத்துக்கு ஏற்ற சோளம் கோ 32'
/
'தட்டு - தானியத்துக்கு ஏற்ற சோளம் கோ 32'
ADDED : ஜூலை 04, 2024 05:17 AM

திருப்பூர்: மகசூல் அதிகம் தரக்கூடிய சோளம் வகை உற்பத்தியில் ஈடுபட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 24 ஆயிரத்து 700 ஏக்கரில் நெல் சாகுபடி; 1.48 லட்சம் ஏக்கரில் தானியம்; 45 ஆயிரம் ஏக்கரில் பயறு வகை; 24 ஆயிரத்து 700 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், சோளம் மட்டும், 91 ஆயிரத்து 390 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், புதிய ரக சோளம் 'கோ 32' ஐ, வேளாண் துறை விவசாயிகள் மத்தியில் ஊக்குவித்து வருகிறது. விதைப்பண்ணை அமைக்க, மானியமும் வழங்குகிறது.
பல்லடம் வட்டாரம், நாராயணபுரம் கிராமத்தில் முத்துசாமி என்பவரது தோட்டத்தில், மானிய உதவியுடன், ஐந்து ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்ட விதைப்பண்ணையை, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், தொழில்நுட்ப அலுவலர் லாவண்யா, வேளாண் அலுவலர் அஜித், உதவி விதை அலுவலர்கள் முத்துச்செல்வன், பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, அரசப்பன் கூறியதாவது: உள்ளூர் ரக சோள விதை பயன்படுத்து வதன் வாயிலாக மகசூல் குறைவாக உள்ளது. தட்டும், தானிய மகசூலும் அதிகளவில் தரக்கூடிய 'கோ 32' வகை சோளப் பயிரை விவசாயிகள் பயிரிட வேண்டும்.
மத்திய, மாநில அரசு களின் நிதியுதவியுடன் ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களான சோளம், கம்பு, ராகி போன்றவற்றை அபிவிருத்தி செய்ய பல்வேறு இனங்களில் விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. இவ்வகை விதையை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகளுக்கு, கிலோவுக்கு, 30 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
அரிசி உணவை தொடர்ந்து உண்பதால், உடலுக்கு மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, குதிரைவாலி, வரகு உள்ளிட்டவற்றை உண்பதன் வாயிலாக உடல் ஆரோக்கியம் மேம்படும்; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.