/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம்; பராமரிக்கணும் வீரர்களை ஊக்குவிக்க வலியுறுத்தல்
/
ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம்; பராமரிக்கணும் வீரர்களை ஊக்குவிக்க வலியுறுத்தல்
ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம்; பராமரிக்கணும் வீரர்களை ஊக்குவிக்க வலியுறுத்தல்
ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம்; பராமரிக்கணும் வீரர்களை ஊக்குவிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2024 10:12 PM
உடுமலை : கிராமப்பகுதி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஊராட்சிகளில் மைதானத்தை பராமரித்து மேம்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளில் திறமையுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் திறன்களை வெளிப்படுத்தவும், போட்டிகளில் பங்கேற்க செய்வதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன்படி, கிராமங்களில் விளையாட்டு திடல் அமைத்தல், உடற்பயிற்சி சாதனங்களுடன் கூடிய விளையாட்டு பூங்கா அமைக்கப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு திட்டமும் துவக்கத்துடன் அரைகுறையான நிலையில் நிறுத்தப்படுகின்றன.
விளையாட்டுத்திடல் அமைப்பதற்கு ஊராட்சிகளின் ரிசர்வ் சைட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆடுகளம் அமைக்கப்பட்டது. அத்துடன் இத்திட்டம் தேக்கமடைந்தது. உடற்பயிற்சி உபகரணங்களுடன் உள்ள விளையாட்டு பூங்கா, தற்போது எந்த பயன்பாடும், பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.
உடுமலை ஒன்றியத்தில் பெரியகோட்டை, போடிபட்டி என இரண்டு ஊராட்சிகளிலும் தற்போது இந்த பூங்காக்கள் நடைபயிற்சி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு, உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சிக்கும் கிரிக்கெட், கூடைபந்து, கையுந்துபந்து உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சிகளுக்கான பேட், பந்து, நெட், அளவு டேப், ஜெர்ஸி என ஒரு 'செட்'டில் 33 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உடுமலை ஒன்றியத்தில் உள்ள, 38 ஊராட்சிகளுக்கு மொத்தமாக, 59 செட்களும், மடத்துக்குளத்தில் உள்ள, 11 ஊராட்சிகளுக்கு, 18 செட்களும், குடிமங்கலத்தில் உள்ள, 23 ஊராட்சிகளுக்கு 32 செட்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கப்பட வேண்டும். விளையாட்டில் திறமையுள்ள வீரர்கள், ஊராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சிபெறலாம்.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்வதற்கான இடம் தேர்வு செய்து, ஊராட்சி நிர்வாகத்தினர் பயிற்சி நடப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவதற்கு, மைதான வசதி அடிப்படை தேவையாக உள்ளது. ஆனால் அதற்கான வசதிகள் கிராமப்பகுதிகளில் இல்லை.
சில மேல்நிலை அரசு பள்ளிகளில் மட்டுமே மைதான வசதி உள்ளது. அவையும் பராமரிப்பில்லாமல் உள்ளது.
இவ்வாறு அடிப்படை கட்டமைப்பு என எதுவும் இல்லாமல், விளையாட்டுவீரர்களுக்கு உபகரணங்கள் மட்டுமே ஊராட்சிகளில் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வும் இல்லை.
இதை பயன்படுத்தி, அரசியல் பிரமுகர்களும் உபகரணங்களை ஊராட்சி நிர்வாகத்தில் பெற்று தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இத்திட்டம் முழுமையாக விளையாட்டு வீரர்களை சென்றடைய, முறையான பயிற்சி இடம் தேவை என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.