/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 தேர்வு நிறைவு: மாணவ, மாணவியர் குஷி
/
பிளஸ் 2 தேர்வு நிறைவு: மாணவ, மாணவியர் குஷி
ADDED : மார் 22, 2024 10:49 PM

திருப்பூர்:மூன்று வாரங்களுக்கு மேலாக நடந்து வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. மாணவ, மாணவியர் தேர்வுகள் முடிந்ததால், உற்சாகமாக துள்ளிகுதித்து, பள்ளியில் இருந்து விடைபெற்றனர்.
கடந்த, 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்கியது. சீரான இடைவெளியில் ஒவ்வொரு பிரிவுக்கும் தேர்வுகள் நடந்து வந்தது. கடந்த, 19ம் தேதி குறிப்பிட்ட குரூப்களுக்கு தேர்வுகள் முடிந்தது. நேற்றுடன் கலை மற்றும் அறிவியல் உட்பட அனைத்து பிரிவுக்கு தேர்வு நடந்து முடிந்தது.
தொடர்ந்து மூன்று வாரங்களாக நடந்து வந்த தேர்வுகள் நேற்றுடன் முடிந்த நிலையில், தேர்வுகளை முடித்த மாணவ, மாணவியர் உற்சாக, புன்னகையுடன் வெளியேறினர். பள்ளி படிப்பு முடிந்து, பிரிவதை நினைத்து, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, கைகுலுக்கி விடைபெற்றனர்.
மாணவியர் பலர் பிரிய மனமின்றி, கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிந்ததையும் காண முடிந்தது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் துாக்கி, தோள்மேல் வைத்து விளையாடி மகிழ்ந்து, பிரியாவிடை பெற்றனர்.
மதிப்பு உணர்ந்த
புத்தகங்கள்
முந்தைய ஆண்டுகளில் தேர்வுகள் முடிந்து விட்டால், புத்தகங்களை கிழித்து துாக்கி எறிவதும், காற்றில் பறக்க விடுவதும் மாணவர்களின் 'சேட்டை'களில் ஒன்றாக இருந்தது. மேல்நிலைப்பள்ளி புத்தகங்கள் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு உதவுவதால், போட்டித்தேர்வுக்கு தயாராகும் பலர் புத்தகங்களை தேடுவதால், பொதுத்தேர்வு முடிந்த பின் இப்புத்தகங்கள் மதிப்பு உயர்வதால், நேற்று புத்தக கிழிக்கும் செயல் ஓரிடத்திலும் இல்லை.
---------------------------
பிளஸ் 2 பொது தேர்வுகள் நேற்று நிறைவடைந்தது. திருப்பூரில் தேர்வு எழுதிய மாணவியர், தங்கள் தோழியருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

