தொழிலாளி தற்கொலை
சுல்தான்பேட்டை அருகே, தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வி.காளியாபுரத்தை சேர்ந்தவர் உத்திரராஜ் 32. மனைவி கார்த்திகா, 28 மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். உத்திரராஜுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருந்த கார்த்திகா, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றார். திரும்பி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, உத்திரராஜ், குளியலறையில் துாக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். சுல்தான்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்.
கடைகளில் கைவரிசை
காங்கயம், கரூர் ரோட்டை சேர்ந்தவர் கோகுல், 35; ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று அதிகாலை கடையின் பூட்டை உடைத்து, 8 ஆயிரம் ரூபாய்; அருகில் உள்ள பத்திர எழுத்தர் கடையில், 2 ஆயிரம், நிதி நிறுவனம் மற்றும் மொபைல் போன் கடை என, நான்கு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காங்கயம் போலீசார் விசாரித்தனர். டூவீலரில் வந்த, இருவர் கடைகளில் கைவரிசை காட்டியது தெரிந்தது. இதுதொடர்பான, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.
கட்டட தொழிலாளி பலி
கட்டுமான பணியின் போது, தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவிநாசியை சேர்ந்தவர் சுரேஷ், 35, கட்டட தொழிலாளி. திருப்பூர் அடுத்த 15 வேலம் பாளையத்தில் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முதல் மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.