/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து எளிதாக போலீஸ் முனைப்பு
/
போக்குவரத்து எளிதாக போலீஸ் முனைப்பு
ADDED : ஆக 30, 2024 06:35 AM

திருப்பூர்: திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப, சாலைகள் இன்னும் மாறவில்லை. பிரதான ரோடுகளில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கை. விசேஷ தினங்களில் சாலைகள் ஸ்தம்பிக்கின்றன. வாகன நெரிசல் ஏற்பட்டு வந்த இடங்களை போலீசார் கண்காணித்து 'ப்ரீ சிக்னலாக' மாற்றும் ஆலோசனையை மேற்கொண்டனர். திருப்பூர், அவிநாசி ரோடு புஷ்பா சந்திப்பில் அமல்படுத்தினர். இது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதுடன், வாகனங்களும் சீராக சென்று வருகின்றன.
போலீஸ் கமிஷனர் அறிவுரை
கடந்த, 5ம் தேதி கமிஷனராக பொறுப்பேற்ற லட்சுமி, நகரில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணி தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார். கடந்த, மூன்று வாரங்களில் நகரில் தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்களை போக்குவரத்து போலீசார் துரிதமாக செய்துள்ளனர்.
தடுப்பு இடைவெளி அடைப்பு
விபத்து ஏற்படும் வகையில், பிரதான சாலைகளின் மையத்தடுப்புகளில் உள்ள இடைவெளிகளை போலீசார் அடைத்து வருகின்றனர். சாலைகளில், வாகனங்களை சீராக நிறுத்த ரோட்டின் இருபுறங்களில் 'ரோப்'களை ஏற்படுத்தினர். குமரன் ரோட்டில் கோர்ட் ரோடு, சபரி ரோடு சந்திக்கும் பகுதியில், வாகன ஓட்டிகள் தாறுமாறாக கடந்து வந்தனர்.
போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயத்துடன் இருந்தது. தற்போது, அந்த இடத்தில் வாகன ஓட்டிகள் விதிமீறல்களில் ஈடுபடாமல் இருக்க ரோட்டின் மையப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
---
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.