/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திட்ட குளறுபடி; தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு
/
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திட்ட குளறுபடி; தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திட்ட குளறுபடி; தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திட்ட குளறுபடி; தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 29, 2024 10:13 PM

உடுமலை : பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் திட்ட குளறுபடி காரணமாக, மாநில, ஊரக ரோடுகள் துண்டிப்பு மற்றும் அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நாள் ஒன்றுக்கு, 16 ஆயிரம் முதல், 25 ஆயிரம் வாகனங்கள் வரை கடக்கின்றன.
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்கும் வகையில், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி முதல், திண்டுக்கல் கமலாபுரம் வரை, 160 கி.மீ., நீளத்தில், 60 மீட்டர் அகலத்தில், நான்கு வழிச்சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) திட்டமிட்டது.
கடந்த, 2018ம் ஆண்டு, இதற்காக, ரூ. 2 ஆயிரம் கோடி திட்ட நிதியும், நிலம் எடுப்பு பணிக்காக, 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. இரு ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறு ஆண்டுகளாகியும் திட்ட பணி இழுபறியாகி வருகிறது.
இதில், திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம், மடத்துக்குளம் - பொள்ளாச்சி என மூன்று பிரிவுகளாக பணிகள் துவங்கின. திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் பகுதிகளில் பணி நிறைவு பெற்று, போக்குவரத்திற்கு ரோடு திறக்கப்பட்டு, சுங்க கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரையிலான ரோடு பணி இழுபறியாகி வருகிறது.
உடுமலை பகுதிகளில், தாராபுரம் ரோடு, திண்டுக்கல் ரோடு சந்திப்புகளில் மேம்பாலம் பணி மற்றும் உயர் அழுத்த மின் கோபுரங்கள் மாற்றி அமைக்கும் பணி என அதிகளவு பணிகள் துவங்காமல் உள்ளது.
இதனால், ரோட்டில் விபத்துக்கள் அதிகரித்து வருவதோடு, வழக்கமான, மாநில, மாவட்ட மற்றும் ஊரக ரோடுகள் துண்டிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நான்கு வழிச்சாலை திட்ட வடிவமைப்பு குளறுபடி காரணமாக, பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரியகோட்டையிலிருந்து ராஜாவூர், மைவாடி செல்லும், கிராமப்புறச்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பிரதான வழித்தடம் அடைக்கப்பட்டு, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.
ரோடு வாகன பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டாமல், பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இப்பகுதியில், மேம்பாலம் அல்லது கீழ் பாலம் அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே போல், பாலப்பம்பட்டி பகுதியில், புதிய மற்றும் பழைய ரோடு சந்திக்கும் பகுதியில் முறையாக திட்டமிடாத நிலையில், எதிர், எதிரே வாகனங்கள் சென்று, தொடர் விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இங்கு மேம்பாலம் அமைக்கவும், தற்காலிகமாக வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில், 'ரவுண்டானா' அமைக்கவும், வாகனங்களின் வேகத்தைக்கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்கவும் வேண்டும்.
ரோடு பணி தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, மழை நீர் வடிகால் அமைக்கவில்லை. அமைக்கப்பட்ட மின் விளக்குகள் எரிவதில்லை, என அப்பகுதி மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த ரோட்டில், மைவாடி, கருப்புச்சாமி புதுார் பகுதியில், கீழ் பாலம் மற்றும் சர்வீஸ் ரோட்டில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே, இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
வேடபட்டி - பழநி தேசிய நெடுஞ்சாலை ரோட்டை துண்டிக்கும் வகையில், நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண கீழ் பாலம் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும்.
அதே போல், நரசிங்காபுரம் பாறை மேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில், 'நகாய்' திட்ட இயக்குனர் நாகராஜ், பொள்ளாச்சி எம்.பி.,ஈஸ்வரசாமி, கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வுசெய்தது.
திட்ட குளறுபடிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, பொதுமக்கள் விளக்கினர். ஆய்வு செய்த அதிகாரிகள், விரைவில், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் புதிதாக உருவாக்கப்படும் என தெரிவித்தனர்.