/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊற்றெடுக்கும் டி.எம்.எப்., சுரங்கப்பாலம்
/
ஊற்றெடுக்கும் டி.எம்.எப்., சுரங்கப்பாலம்
ADDED : ஆக 06, 2024 06:36 AM

திருப்பூர்: டி.எம்.எப்., சுரங்க பாலத்தில் ஊற்றெடுத்து வெளியேறும் தண்ணீர், வாகன ஓட்டிகளுக்கு அவதியை ஏற்படுத்துகிறது. பாலத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், சுரங்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன், இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதன், வடபுற பகுதியில், பக்கவாட்டுச் சுவற்றிலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. பாலத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து வரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சமாளிக்கும் அதிகாரிகள்
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''பாலம் கட்டப்பட்டுள்ள இடத்தை ஒட்டி, கிணறு இருந்தது. பயன்பாட்டில் இல்லாத நிலையில், கட்டுமானப் பணியின் போது கிணற்றை மூடி, கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. கிணறு அமைந்திருந்த இடத்தில் அவ்வப்போது நீர் ஊற்றெடுக்கிறது.
சுரங்க பாலம் என்பதால், பக்கவாட்டில் கிணறு அமைந்திருந்த இடத்தில் இந்த தண்ணீர் ஊற்று போல் வெளியேறுகிறது. நீர் வெளியேறுவதால், பாலத்துக்கு பாதிப்பு இல்லை. நீர் வெளியேற முடியாமல் அதே இடத்தில் தேங்கினால் மட்டுமே கட்டுமானத்துக்கு பாதிப்படையும். நீர் தேங்கும் போது, மாநகராட்சி சார்பில் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகிறது'' என்றனர்.
காத்திருக்கும் அபாயம்
வாகன ஓட்டிகள் கூறுகையில், ''மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கினால், உடனே மோட்டார் வைத்து உறிஞ்சி வெளியேற்றுகின்றனர். மற்ற நாட்களில் துளியும் கண்டு கொள்வதில்லை. சுவற்றின் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறுவதால், பாலத்தின் கட்டுமானத்துக்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி பொறியாளர் குழுவினர், உடனே டி.எம்.எப்., பாலத்தில் ஆய்வு செய்து, தண்ணீர் கசிவை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.