செயல்படாத தானியங்கி சிக்னல் சந்திப்பு பகுதியில் பிரச்னை
செயல்படாத தானியங்கி சிக்னல் சந்திப்பு பகுதியில் பிரச்னை
ADDED : ஜூன் 17, 2026 07:41 PM
உடுமலை: வெஞ்சடை கால்வாய் பாலம் பகுதியில், தானியங்கி சிக்னல்கள் செயல்படாமல் உள்ளதால், போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு, விபத்து அபாயம் நிலவுகிறது.
உடுமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில், வெஞ்சமடை அருகே பி.ஏ.பி., கால்வாய் குறுக்கிடுகிறது. ரோட்டின் அகலத்துக்கேற்ப கால்வாய் பாலம் இல்லாததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.
நீண்ட இழுபறிக்குப்பிறகு, பாலம் விரிவுபடுத்தப்பட்டது; இருப்பினும் அருகிலேயே இணைப்பு ரோடு உள்ளதால், நெரிசல் ஏற்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் சந்திப்பு பகுதியில், வேகத்தை குறைத்துச்செல்லும் வகையில், தானியங்கி பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டது.
நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் வேகத்தை குறைக்கும் போது, இணைப்பு ரோட்டுக்கு வாகனங்கள் திரும்ப எளிதாக இருந்தது. தற்போது இந்த சிக்னல் செயல்படுவதில்லை.
இதனால், சந்திப்பில் போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தானியங்கி சிக்னலை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, பிரச்னைக்கு தீர்வு காண வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
