/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கர்நாடகாவில் பரவலாகும் கோழிப்பண்ணைகள்
/
கர்நாடகாவில் பரவலாகும் கோழிப்பண்ணைகள்
ADDED : செப் 01, 2024 02:02 AM

பல்லடம்:- மக்காச்சோள சாகுபடி காரணமாக, கறிக்கோழி பண்ணைகள், கர்நாடகாவில் அதிகரித்து வருவது, தமிழக கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் வாயிலாக, தினசரி, ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. சோயா, மக்காச்சோளம், தவிடு ஆகியவை கறிக்கோழிகளின் முக்கிய தீவனங்கள். தமிழகத்துக்கு தேவைப்படும் மக்காச்சோளத்தில், 30 சதவீதம், கர்நாடகா, ஆந்திரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. கறிக்கோழிகளின் தேவைக்கு ஏற்ப மக்காச்சோள உற்பத்தி தமிழகத்தில் இல்லாததால், அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யவேண்டி உள்ளது.
பல்லடத்தை தலைமையிடமாக கொண்ட, கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:
உள்ளூர் மக்காச்சோளத்துக்கு தட்டுப்பாடு உள்ளது. தமிழக விவசாயிகளிடம், விளைநிலத்துக்கே நேரடியாக சென்று மக்காச்சோளம் கொள்முதல் செய்ய பி.சி.சி., தயாராக உள்ளது. ஆனால், கறிக்கோழி பண்ணைகளுக்கு தேவைப்படும் மக்காச்சோளம் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதாலேயே பூர்த்தி ஆகிறது. தமிழகத்தில் மக்காச்சோள பரப்பளவை அதிகப்படுத்த வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்கு இலவச விதை, மானியம் ஆகியவற்றை வழங்கி ஊக்கப்படுத்துவதுடன், வேளாண் பல்கலை மக்காச்சோள உற்பத்தியை பெருக்குவது குறித்து ஆராய்ந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கர்நாடகாவில் மக்காச்சோள உற்பத்தி அதிகரித்து வருவதால், அங்கு கறிக்கோழி பண்ணைகளும் படிப்படியாக உயர்ந்து வருகின்றன. மக்காச்சோள சாகுபடியை தமிழகத்தில் அதிகப்படுத்தாவிட்டால், கறிக்கோழி உற்பத்தி தொழில் கண்டிப்பாக பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.