/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊருக்குள் பஸ்கள் வராததை கண்டித்து போராட்டம்
/
ஊருக்குள் பஸ்கள் வராததை கண்டித்து போராட்டம்
ADDED : ஏப் 30, 2024 10:58 PM

அவிநாசி:திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த தெக்கலுாரில், தினமும் மாணவர்கள், தொழிலாளர்கள் என, 20,000த்துக்கும் மேற்பட்டோர் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர்.
கோவை - சேலம் ஆறுவழிச்சாலை அமைந்த பின், 10 ஆண்டுகளாக, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், தெக்கலுாரில் நிற்காமல் சென்று வருகின்றன.
இச்சூழலில், நேற்று முன்தினம் கோவையில் இருந்து தெக்கலுார் செல்ல, ஐந்து மாணவர்கள் தனியார் பஸ்சில் ஏறினர். அவர்களை தெக்கலுாருக்குள் பஸ் செல்லாது எனக்கூறி, டிரைவர், நடத்துனர் அவிநாசியில் இறக்கி விட்டு சென்றனர்.
ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி, தெக்கலுார் பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பு போராட்டத்தை இரவு, 10:40 மணி முதல் துவக்கினர். தகவலறிந்து சென்ற அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் பேச்சு நடத்தினார். இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி, போராட்டத்தை தொடர்ந்தனர்.
நேற்று காலை, தாசில்தார் மோகனன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாஸ்கர், கருமத்தம்பட்டி அரசு பஸ் டிப்போ மேலாளர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்னிலையில் பேச்சு நடந்தது.
அதில், தெக்கலுார் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, ஊருக்குள் நுழையாமல் செல்லும் பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். அதிகாரிகளின் உறுதியை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.