/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலைகருகலை தவிர்க்க வழிகாட்டுதல் வழங்கல்
/
இலைகருகலை தவிர்க்க வழிகாட்டுதல் வழங்கல்
ADDED : ஏப் 01, 2024 11:41 PM
உடுமலை;நெல் சாகுபடியில், இலைக்கருகல் நோயை தவிர்க்கும் முறைகள் குறித்து கோவை வேளாண் பல்கலை., சார்பில், வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
நெற்பயிர்களில், ஒரு வகை பாக்டீரியாவானது, முழு பயிர் அல்லது ஒரு சில இலைகளை வாடச்செய்யும். கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் இந்நோய் தாக்குதல் ஏற்படும்.
மேலாண்மை முறைகள்
நோய் எதிர்ப்பு திறனுடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். மேலும், 60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சூடோமோனாஸ் துாளை நன்கு கலக்கி, 60 கிலோ விதையை இக்கலவையில் 24 மணி நேரம் ஊறவைத்த பின் முளைகட்டி நாற்றங்காலில் விதைக்கலாம்.
'சூடோமோனாஸ் துகள் தயாரிப்பு கொண்டு விதைநேர்த்தி செய்தல்; 'நாற்றுக்களின் வேர் நனைத்தல்' மற்றும் நட்ட 40 மற்றும் 50ம் நாளில் 'இலை வழியாகத் தெளித்தல்' (2 கிராம் துகள் தயாரிப்பு ஒரு லிட்டர் தண்ணீரில்) ஆகிய மூன்று முறைகளையும் பின்பற்றுவதால் பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரியா வாயிலாக மூன்று, நான்கு முறையாகப் பிரித்து மேலுரமாக இடலாம்.
ஐந்து சத வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 3 சத வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 10 சத வேப்பம் பிண்ணாக்குச் சாறு அல்லது 10 சத வேலி கருவேல் இலை சாறு அல்லது 20 சத சாணக்கரைசல், இவைகளில் ஏதேனும் ஒன்றை நோய் தோன்றும் தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் இடைவெளியிலும் மறுமுறையும் தெளிக்கலாம்.
இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

