/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆங்கில வழி கலைப்பிரிவில் சேர்க்கையில்லை: கேள்விக்குறியாகும் மாணவர்கள் படிப்பு
/
ஆங்கில வழி கலைப்பிரிவில் சேர்க்கையில்லை: கேள்விக்குறியாகும் மாணவர்கள் படிப்பு
ஆங்கில வழி கலைப்பிரிவில் சேர்க்கையில்லை: கேள்விக்குறியாகும் மாணவர்கள் படிப்பு
ஆங்கில வழி கலைப்பிரிவில் சேர்க்கையில்லை: கேள்விக்குறியாகும் மாணவர்கள் படிப்பு
ADDED : மே 14, 2024 11:11 PM
உடுமலை:பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 ஆங்கில வழி கலைப்பிரிவில் அட்மிஷன் மறுக்கப்படுவதால், நுாற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என, பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடுமலை அருகேயுள்ள, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சுற்றுப்பகுதி கிராம குழந்தைகளின் படிப்புக்கு முக்கிய மையமாக உள்ளது. இப்பள்ளியில், கல்வியாண்டு தோறும், 90க்கும் அதிகமான மாணவ, மாணவியர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள், அதே பள்ளியில், மேல்நிலை வகுப்புகளிலும், சேர்ந்து படிக்கின்றனர்.
மேலும், கொங்கல்நகரம், வா.வேலுார், அம்மாபட்டி, புக்குளம் உள்ளிட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், மேல்நிலை கல்விக்கே பெதப்பம்பட்டி பள்ளியையே நம்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்தாண்டு, பிளஸ்1ல், ஆங்கில வழி கலைப்பிரிவு (ஆர்ட்ஸ்) பிரிவில் சேர அதிகளவு மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அப்பிரிவில் மாணவர் சேர்க்கை இல்லை என, பள்ளி நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, அப்பகுதி பெற்றோர் கூறியதாவது: பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியே, சுற்றுப்பகுதி கிராம குழந்தைகளின் மேல்நிலை படிப்புக்கு ஆதாரமாக உள்ளது.
இதில், வணிகவியல் உள்ளடக்கிய கலைப்பிரிவில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், பி.காம்., உள்ளிட்ட இளங்கலை படிப்பில் எளிதாக சேர முடியும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர், இப்பாடப்பிரிவையே இளங்கலையில் படிக்க விரும்புகின்றனர். ஆனால், பள்ளியில், ஆங்கில வழி ஆர்ட்ஸ் குரூப்பில், மாணவர் சேர்க்கை கிடையாது என, திருப்பி அனுப்புகின்றனர்.
இதனால், அதே பள்ளி மற்றும் சுற்றுப்பகுதி உயர்நிலைப்பள்ளிகளில் படித்த, நுாற்றுக்கணக்கான மாணவர்களின் மேற்படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளி நிர்வாகம் தரப்பில், முறையாக பதில் தரவும் மறுக்கின்றனர்.
இது குறித்து தமிழக முதல்வருக்கும், கல்வித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

