ADDED : மே 31, 2024 01:58 AM

திருப்பூர்;மாநில அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், திருப்பூரில், 'மரகதப் பூஞ்சோலை' உருவாக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது.
சில ஆண்டுகளாக காலநிலை மாற்றம் அச்சுறுத்தி வரும் நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்க்க, மரம், செடி, கொடிகளை உள்ளடக்கிய சோலை காடுகளை உருவாக்க வேண்டியதும்; இருக்கின்ற வன வளத்தை பாதுகாக்க வேண்டியதும், காலத்தின் அவசியமாக மாறிப்போயிருக்கிறது.இதை நோக்கமாக கொண்டு, மாநில அரசு, அமெரிக்க நிதியுதவி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள, 17 ஆயிரம் கிராமங்களில் 'மரகதப் பூஞ்சோலை' அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு வனச்சரகத்துக்கு உட்பட்டு, ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, ஒரு எக்டர் அதாவது, 2.47 ஏக்கர் நிலத்தில், பூஞ்சோலை உருவாக்கி, அதில், பழம் தரும், நிழல் தரும் மரங்கள், மலர்ச் செடிகள் நட்டு வளர்ப்பது, திட்டத்தின் நோக்கம். 2 ஆண்டு காலம் அதை பராமரிக்கும் பொறுப்பை வனத்துறை ஏற்கும்; பின், அப்பூங்கா, சம்மந்தப்பட்ட ஊராட்சி வசம் ஒப்படைக்கப்படும்.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில், திருப்பூர் வனத்துறை சார்பில், மரகதப் பூஞ்சோலை அமைக்கப்பட்டுள்ளது. மலர் செடிகள், மரச் செடிகள் நடவு செய்யப்பட்டு, பொலிவுடன் காணப்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், பொதுமக்கள் அமர்ந்த இளைப்பாறுவதற்கான அறை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
'தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், தேர்தல் முடிவு வெளியான பின், திறப்பு விழா நடத்தப்படும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.
மார்க்கெட் வளாகம்
திருப்பூர், மே 31-
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்படும் தினசரி மார்க்கெட் கட்டுமானப் பணிகள் பெருமளவு நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் வளாகம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம், காமராஜ் ரோட்டில் பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்புறத்தில் செயல்பட்டு வந்தது. ஏறத்தாழ 2.25 ஏக்கர் பரப்பில், நீண்ட காலமாக இந்த வளாகம் இயங்கி வந்த இவ்வளாகத்தில் ஏறத்தாழ 400 கடைகள் இருந்தன.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இந்த வளாகத்தைப் புதுப்பித்து நவீன வசதிகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டது. இப்பணி ஏறத்தாழ 30 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியது. இப்பணிக்காக இங்கு இயங்கிய கடைகள் தற்காலிகமாக, காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.அதன் பின் இதன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது தற்போது தரை மற்றும் முதல் தளத்தில் 396 கடைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாலமான பார்க்கிங் வளாகம், 250க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 85 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வளாகம் 4200 ச.மீ., பரப்பில் அமைந்துள்ளது. கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், வளாகத்தில் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மார்க்கெட் வளாகம் கட்டுமானப் பணி பெருமளவு முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இது பயன்பாட்டுக்கு திறக்கும் வகையில் பணி மும்முரமாக நடக்கிறது.