sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிகழ்நேர மாற்றங்களும்... நீண்ட கால கோரிக்கைகளும்! பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கு நிதியமைச்சர் - அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

/

நிகழ்நேர மாற்றங்களும்... நீண்ட கால கோரிக்கைகளும்! பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கு நிதியமைச்சர் - அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

நிகழ்நேர மாற்றங்களும்... நீண்ட கால கோரிக்கைகளும்! பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கு நிதியமைச்சர் - அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

நிகழ்நேர மாற்றங்களும்... நீண்ட கால கோரிக்கைகளும்! பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கு நிதியமைச்சர் - அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

2


ADDED : செப் 14, 2024 12:06 AM

Google News

ADDED : செப் 14, 2024 12:06 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் பனியன் தொழில் துறையினருக்கான, நிகழ்நேர மாற்றங்களையும், நீண்ட கால கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டுமென, மத்திய நிதியமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரிகள் குழுவுடன், நேற்று முன்தினம் தொழில்துறையினரை சந்தித்தார். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்புகளுடன், கொடீசியா அரங்கில் கலந்துரையாடல் நடத்தினார்.

அமைச்சர் சந்திக்கும் முன், பல்வேறு அரசுத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள், தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், இணை செயலாளர் குமார் துரைசாமி பங்கேற்றார்.

ஜவுளித்துறை அமைச்சக இயக்குனர் ரிச்சா குப்தா, எம்.எஸ்.எம்.இ., அமைச்சகத்தின் கூடுதல் கமிஷனர் இஷிதா கங்குலி திரிபாதி, ஜி.எஸ்.டி., கமிஷனர் ஹிமானி பனாயா, சுங்கப்பிரிவு இயக்குனர் ஆனந்த் ராதாகிருஷ்ணன், வருமானவரி இயக்குனர் சுரபி சர்மா ஆகியோரை சந்தித்து, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாகவும், தொழில்துறையினர் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் விளக்கினார்.

உயர் அதிகாரிகளிடம், இணை செயலாளர் குமார் துரைசாமி, திருப்பூர் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும், தொழிலை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், தகுந்த புள்ளி விவரங்களுடன் கூறினார்.

வங்கதேசம் மற்றும் சீனாவில் இருக்கும் அசாதாரண சூழல் காரணமாக, சாதகமான தொழில் சூழல் நிலவும் இந்த காலகட்டத்தில், தற்போதைய பிரச்னைகள், எதிர்கால பிரச்னைகள் மற்றும் தேவைகள், உடனடியாக அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து மனு கொடுக்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

கோரிக்கை பட்டியல்

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பிரத்யேக நிதிக்கொள்கையை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும். நிதி பரிவர்த்தனை சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கும், நிதிக்கொள்கையை செயல்படுத்த வேண்டும்.

* செயல்படாத வங்கி கணக்கை முடக்கும் காலவரம்பு, 90 நாட்கள் என்பதை, மீண்டும் 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.

* வங்கியாளர்கள் விரும்பினாலும், குறு, சிறு தொழில்களுக்கு நிதியுதவி அளிக்க இயலவில்லை. நிதியுதவி வழங்கும் வகையில், வங்கி நிதிக்கொள்கையை மாற்றம் செய்ய வேண்டும்.

* ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்திய பின், ஐந்தாண்டு தணிக்கையில், பல்வேறு சிறு தவறுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது. அவற்றை சிறப்பு சமாதான் திட்டம் வாயிலாக சுமூக தீர்வு காண வேண்டும்.

* வளரும் பொருளாதாரத்துக்கு வரி விதிப்பு அவசியம் என்றாலும், புதிய வரி சீர்திருத்தம் காரணமாக, உடனடியாக கையாள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சிறப்பு திட்டத்தில் நிலுவையை தீர்த்து வைக்க வேண்டும்.

* ஜி.எஸ்.டி.,க்கு முன்னதாக, வணிகவரியில் உள்ள நடவடிக்கைகள் முடிய, பல ஆண்டுகளாகும். தொழில்துறைக்கு மட்டுமல்ல, அரசுக்கும் சுமையாக இருக்கிறது. சமாதான் திட்டம் வாயிலாக, வணிகவரி நிலுவைகளையும் தீர்வுகாண வேண்டும்.

* தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மானியம் வழங்கிய, 'டப்' திட்டத்தில், நுாற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கு, மானிய நிலுவை கிடைக்கவில்லை. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாலும், சட்ட சிக்கல் இருப்பதால், கிடைக்கவில்லை. எளிய வகையில் மானிய தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* 'டப்' திட்டத்தால், திருப்பூர் போன்ற நகரங்களில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை பெற முடிந்தது. இறக்குமதி இயந்திரங்களால், பொருளாதாரம் வளர்ச்சி பெற்றது. மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

* ஜி.எஸ்.டி., அதிகாரிகள், ஏற்றுமதிக்கு அனுப்பும் சரக்கு வாகனங்களை, தணிக்கை என்ற பெயரில் காத்திருக்க செய்கின்றனர். படிவங்களில் உள்ள சிறு தவறுகளுக்காக, அதிக தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. கன்டெய்னர் தட்டுப்பாடு, விமானத்தில் இடம் பிடிக்க தட்டுப்பாடு உள்ள நேரத்தில், ஒரு நாள் முழுவதும் கன்டெய்னரை நிறுத்தி வைப்பதால், பெரும் சிரமம் ஏற்படுகிறது. இறக்குமதியாளரிடம், அவப்பெயரும் ஏற்படுகிறது. ஆன்லைன் வாயிலாக சரிபார்க்கும் வசதி இருப்பதால், ஒரு மணி நேரத்துக்குள் ஆய்வை முடித்து, சரக்குகளை அனுப்பி வைக்க வழி செய்ய வேண்டும்.

* சுங்கவரித்துறையின், 'ஐஸ்கெட்' இணையதளத்தில், அடிக்கடி சர்வர் கோளாறு ஏற்படுகிறது. அதனால், ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைிள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இணையதளத்தை சீரமைக்க வேண்டும்.

உலகளவில் சாதிக்க

ஊக்குவிக்க வேண்டும்!

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் - ரஷ்யா போர்சூழல், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார சிக்கல் போன்ற பாதிப்புகளை கடந்து, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட குழப்பம் போன்ற, இந்தியாவுக்கு சாதகமான இந்தகாலகட்டத்தில், திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளருக்கு தேவையான, நிகழ்நேர மாற்றங்களையும், நீண்ட கால கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும். வளம் குன்றா வளர்ச்சி நிலை என்ற கோட்பாட்டில், ஆடை உற்பத்தி செய்யும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களை, உலக அளவில் முதன்மைப்படுத்த, தேவையான ஊக்குவிப்பு வசதியை செய்து கொடுக்க வேண்டும்.

- குமார் துரைசாமி

இணை செயலாளர்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்

'கிரீன் எனர்ஜி' மானியம்

சாய ஆலைகள், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சாயக்கழிவு சுத்திகரிப்பு செய்கின்றன. தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, 'ஏ -டப்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

மின் கட்டண சுமையை குறைக்க, பசுமை சார் மின் உற்பத்திக்கு மாற வேண்டும்; அதற்காக, மத்திய அரசு, வட்டியில்லாத, மானியத்துடன் கூடிய பசுமை ஆற்றல் கடனுதவி வழங்க வேண்டும். வங்கிகளில், வட்டி விகிதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சாய ஆலைகளும், குறு, சிறு தொழில்கள் பிரிவில் இருப்பதால், குறைந்த வட்டியில் புதிய கடன் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

திருப்பூர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள 'மிக்ஸர் சால்ட்' எனப்படும், உப்புக்கழிவை பாதுகாப்பாக அகற்ற, மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

- காந்திராஜன்

திருப்பூர் சாய ஆலை

உரிமையாளர் சங்க தலைவர்

அன்னிய செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு, அரசு வழங்கி வரும் நிதி மானியத்தை நீட்டிக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் வழங்கியது போல், அவசரகால கடன் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்

ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு

பாராட்டு சான்றிதழ்

கோவை ஹிந்துஸ்தான் கல்லுாரியில் நடந்த விழாவில், தொழில்துறையினருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திறன் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினர். அவ்வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் திறன் மேம்பாட்டு குழு தலைவர் சக்திவேல், பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களுக்கு, திறன் பயிற்சி அளித்து வாழ்வாதாரத்துக்கு வலு சேர்த்துள்ளதாக, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us