ADDED : செப் 01, 2024 01:40 AM

பல்லடம்;பருவாய் கிராமத்தில் பழுதாகி உள்ள நீர் பகிர்மான நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்லடம் ஒன்றியம், பருவாய் கிராமத்தில், 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் பகிர்மான நிலையம் உள்ளது. காரணம்பேட்டையில் இருந்து கொண்டு வரப்படும் அத்திக்கடவு குடிநீர், இங்குள்ள நீர் பகிர்மான நிலையத்தில் சேகரிக்கப்பட்டு, கரடிவாவி, பருவாய், புளியம்பட்டி, கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த நீர் பகிர்மான நிலையம் பழுதடைந்து காணப்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'ஏறத்தாழ, 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நீர் பகிர்மான நிலைய கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்போதும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளதால், இந்த நீர் பகிர்மான கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, கூடுதல் கொள்ளளவு கொண்ட புதிய நீர் பகிர்மான நிலையத்தை அமைக்க வேண்டும்' என்றனர்.