/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுது
/
குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுது
ADDED : மே 03, 2024 01:30 AM

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகம், 32 அரசு துறை அலுவலகங்களை உள்ளடக்கி செயல்படுகிறது. துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
கலெக்டர் அலுவலக கட்டடம் ஏழு தளங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் அதிகபட்சம் இரண்டு, குடிநீர் சுத்திகரிப்பு கருவி வைக்கப்பட்டிருந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. சில இடங்களில் வெறும் இரும்புக்கூண்டு மட்டுமே உள்ளது; சுத்திகரிப்பு கருவி மாயமாகிவிட்டது.
குறைகேட்பு கூட்ட அரங்கம், ஆதார், இ-சேவை மையம், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் போன்ற முக்கியமான துறைகள், தரைதளத்தில் இயங்கிவருகின்றன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் தரைதளத்தில், ஒரு குடிநீர் சுத்திகரிப்பு கருவி கூட இல்லை.
குறைகேட்பு கூட்ட அரங்கம் அருகே வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதடைந்து பலமாதங்களாகியும் சரிசெய்யப்படவில்லை; வெறும் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
கூட்ட அரங்கிற்கு வெளியே பிளாஸ்டிக் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. குறைகேட்பு கூட்ட நாட்களில் மட்டுமே, இந்த டேங்கில் குடிநீர் நிரப்பப்படுகிறது. அரசு அலுவலர்கள் சிலர், டேங்கிலிருந்து தண்ணீர் பிடித்து, வாகனங்களை துாய்மை செய்கின்றனர்.
கோடை வெயில் மிக கடுமையாக வாட்டிவருகிறது. குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை சரி செய்து; சரி செய்யமுடியாதவற்றை அகற்றிவிட்டு, புதிய சுத்திகரிப்பு கருவிகள் வாங்கி பொருத்தி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவேண்டும்.