/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூடு விழாவை எதிர்நோக்கிய அரசு பள்ளி ஆசிரியர் முயற்சியால் புத்துயிர்!
/
மூடு விழாவை எதிர்நோக்கிய அரசு பள்ளி ஆசிரியர் முயற்சியால் புத்துயிர்!
மூடு விழாவை எதிர்நோக்கிய அரசு பள்ளி ஆசிரியர் முயற்சியால் புத்துயிர்!
மூடு விழாவை எதிர்நோக்கிய அரசு பள்ளி ஆசிரியர் முயற்சியால் புத்துயிர்!
ADDED : ஆக 07, 2024 11:19 PM

உடுமலை:குறைவான மாணவர்களால் மூடுவிழாவை எதிர்நோக்கிய உடுமலை அரசு பள்ளியை, ஆசிரியர் ஒருவர், தன் சொந்த முயற்சியால், பள்ளியை புத்துயிர் பெற செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சிக்குட்பட்டது, ஜக்கம்பாளையம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், இரண்டு மாணவர்கள் மட்டுமே நடப்பு கல்வியாண்டில் இருந்தனர். இதனால், இப்பள்ளி, மூடுவிழாவை எதிர்நோக்கிய பள்ளியாக இருந்தது.
இந்நிலையில், தற்போது நடந்த ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில், இப்பள்ளியில் ஏற்கனவே இருந்த ஆசிரியர்கள், இடமாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்றனர்.
புதிதாக, ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன், உதவி ஆசிரியராக இப்பள்ளிக்கு மாறுதல் அடைந்து வந்துள்ளார். குறைவான மாணவர்களைக் கொண்ட இப்பள்ளி மீண்டும் புத்துயர் பெற, அருகிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குச் சென்று, அங்குள்ள பள்ளி செல்லும் வயதிலுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இதன் வெளிப்பாடாக, தற்போது, பிற மாநில குழந்தைகள் உட்பட, 21 பேர் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெற்றோரும் ஆர்வத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு, வாகன ஏற்பாடும் செய்து, தொடர்ந்து அவர்களை பள்ளிக்கு அழைத்து வருகிறார்.
இது குறித்து ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன் கூறியது: பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும், சேர்க்கை பதிவு செய்யப்பட்டு விட்டது. விரைவில், அவர்களுக்கான நலத்திட்ட பொருட்கள் வந்து சேர்ந்துவிடும். இன்னும் அருகிலுள்ள பகுதிகளையும் சென்று பார்வையிட வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தி, இடைநிற்றல் இல்லாத அடிப்படை கல்வி வழங்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.