/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய் விலை உயர்வு சந்தைக்கு வரத்து குறைவு
/
தேங்காய் விலை உயர்வு சந்தைக்கு வரத்து குறைவு
ADDED : மே 03, 2024 12:46 AM
திருப்பூர்:திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், தெற்கு உழவர் சந்தைக்கான தேங்காய் வரத்து குறைந்து வருகிறது. பத்து முதல், 15 விவசாயிகள் மூட்டை மூட்டையாக தேங்காய் கொட்டி விற்பனை செய்வர்.
தேங்காய் சிறியது, எட்டு முதல், 12 ரூபாய், நடுத்தரம், 15 முதல், 18 ரூபாய், பெரிய ரகம், 22 முதல் 25 ரூபாய்க்கு விற்கப்படும்.
கடந்த, 15 நாளாக தேங்காய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சந்தையில் விரல்விட்டு எண்ணக்கூடிய விவசாயிகள் மட்டுமே தேங்காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதற்கேற்ப மூட்டை எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதால், தேங்காய் விலை மெல்ல உயர துவங்கியுள்ளது.
தேங்காய் விற்கும் விவசாயிகள் கூறியதாவது: மார்கழி மாதத்துக்கு பின் மழையே இல்லை. வெயிலுக்கு தென்னை ஓலைகள் நிறம் மாறி வருகிறது. தோப்பில் ஒவ்வொரு மரத்திலும், காய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது; விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இளநீர் நல்ல விலைக்கு விற்பதால், பெரும்பாலும் இளநீருக்கு எடுத்துக் கொள்கின்றனர்.
இதனால், பத்து ரூபாய்க்கு தேங்காயே கிடையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறிய ரகம் கூட, 12 முதல், 14 ரூபாய்க்கு தான் விற்கிறோம். தற்போதைக்கு வரத்து உயர வாய்ப்பில்லை. தேங்காய் விலை குறையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.