/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி வகுப்பறைக்குள் பாம்பு புகும் அபாயம்
/
கல்லுாரி வகுப்பறைக்குள் பாம்பு புகும் அபாயம்
ADDED : மே 19, 2024 11:33 PM

திருப்பூர்;செடி, கொடிகள் படர்ந்துள்ளதால், எல்.ஆர்.ஜி., கல்லுாரி வகுப்பறைக்குள் பாம்பு புகும் அபாயம் உள்ளது.
திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியின் தென்மேற்கு பகுதியில் உள்ள கட்டடத்தில், வகுப்பறைகள் இயங்கி வந்தன. லோக்சபா தேர்தல் காரணமாக, தேர்வுகள் விரைந்து முடிக்கப்பட்டன. ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
வரும், ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணுவதற்கான மையமும் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கல்லுாரி நிர்வாக அலுவலகம், தற்காலிகமாக, தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது.
கல்லுாரி வளாகத்தின் தென்மேற்கு திசையில், எஸ்.பி., முகாம் அலுவலகத்துக்கு அருகே அமைந்துள்ள கட்டடத்தில் செடிகள் படர்ந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக, மாணவிகள் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், கல்லுாரி கட்டடத்தின் மீது செடி படர்ந்துள்ளதால், பாம்புகள் எளிதாக அதன் வழியே வகுப்பறைக்குள் செல்லும் அபாயம் உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், பாம்புகள் அதிகம் தங்கியிருக்கவும் வாய்ப்புள்ளது.கல்லுாரி வளாகத்திற்குள் இருக்கும் கட்டடத்தை பராமரிக்க வேண்டும். முதல் கட்டமாக, கட்டடத்தின் மீது படர்ந்துள்ள செடிகளையும், புதர்களையும் அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரும், பாம்பு அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.
எனவே, செடி படர்ந்த நிலையில் பாழடைந்ததாக மாறி வரும் கட்டடத்தை முறையாக பராமரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

