/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதிப்பெண் மட்டும் வெற்றிக்கான அடையாளம் அல்ல!
/
மதிப்பெண் மட்டும் வெற்றிக்கான அடையாளம் அல்ல!
ADDED : மே 06, 2024 11:34 PM

திருப்பூர்;'மதிப்பெண் மட்டும், வாழ்க்கையில் மதிப்பு தருவதில்லை; தனிப்பட்ட திறமையை மெருகேற்றுவதே, மதிப்பு தேடி தரும் என்பதை, பொது தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் உணர வேண்டும்' என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று, பிளஸ் 2 பொதுதேர்வு முடிவு வெளியானது; திருப்பூரை பொறுத்தவரை, 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இது மாநிலத்திலேயே, தேர்ச்சி சதவீதம் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. 3 சதவீதத்துக்கு குறைவாகன மாணவர்களே தோல்வியடைந்தனர். இருப்பினும், தோல்வியடைந்தவர்கள், மனம் தளரக்கூடாது என, பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
மதிப்பெண் மட்டும்
திறமையல்ல...
மதிப்பெண் வைத்து, மாணவர்களின் மனநிலையை நாங்கள் கணிப்பதில்லை; மதிப்பெண்ணை மட்டும் வைத்து ஒருவரது திறமையை மதிப்பிட முடியாது. தேர்வில் தோல்வியுறும் மாணவர்களின், பிற திறமைகளை கண்டறிவது அவசியம்; அந்த திறமையை பட்டைத்தீட்டி, மெருகேற்ற வேண்டும். அவ்வாறு, கல்வியில் பின் தங்கியிருந்த போதும், விளையாட்டு, அரசியல் என, பிற துறைகளில் உச்சம் தொட்ட பலரை உதாரணமாக சொல்ல முடியும்.
பல மாணவ, மாணவியர் கற்றல் குறைபாடு என்ற வகைபாட்டில் கொண்டு வரப்படுகின்றனர்; அவர்களுக்கு எழுதும் போது, பிழை அதிகம் வரும். உரிய பயிற்சி வாயிலாக அதை சரி செய்ய முடியும். அத்தகைய மாணவ, மாணவியருக்கு, தேர்வில் சில சலுகைகளை அரசே வழங்குகிறது; அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதன் வாயிலாக தேர்ச்சி பெற முடியும்.- டாக்டர். பிரனேஷ்,மனநல சிறப்பு மருத்துவர்.
தோல்வியில் இருந்து
மீள்வது மிக எளிது..
தோல்வியை, தோல்வியாக பார்க்காமல், வெற்றி சற்றே தள்ளிப் போயிருக்கிறது என, நினைக்க வேண்டும். தோல்வியடைந்த பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கல்வியாண்டு வீணாகாத வகையில், அடுத்த இரு மாதத்தில் தோல்வியடைந்த பாடத்தில் தேர்வெழுதும் வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
எனவே, தோல்வியடைந்த மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியை கண்டு மனம் தளரவே கூடாது. பல மாணவர்கள் கல்வி பயிலும் ஆர்வம் இருந்தாலும், அவர்களது குடும்ப சூழ்நிலையும், தோல்விக்கு காரணமாக அமைந்து விடுகிறது; அதையும் கண்டறிந்து, சரி செய்யும் பட்சத்தில், அந்த மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
- டாக்டர் தங்கராஜன்
ராயல் ஏஞ்சல் டுட்டோரியல்
கல்லுாரிமுதல்வர்