/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய விளையாட்டு மைதானம் அமைக்க ஊராட்சிகள் தேர்வு
/
புதிய விளையாட்டு மைதானம் அமைக்க ஊராட்சிகள் தேர்வு
ADDED : ஜூலை 24, 2024 08:34 PM
உடுமலை : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதிய குளம் அமைப்பதற்கும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும், ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராமங்களில் கிராம மேம்பாட்டு பணிகள் மற்றும் கட்டமைப்பு பணிகளும் நடக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டிலும், இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பணிகள் நிர்ணயிக்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
வரப்பு அமைத்தல், தார்சாலை அமைத்தல், மரம் வளர்ப்பு, அரசு புதிய கட்டமைப்பு பணிகளும் இத்திட்டத்தின் கீழ் வழக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன.
நடப்பாண்டில், கூடுதலாக ஊராட்சிகளில் புதிய குளம், விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
மாநில இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கிராமப்பகுதி விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இடவசதி உள்ள ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கிராமப்பகுதிகளின் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிப்பதற்கு, ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை தவிர, புதிய குளம் அமைப்பதற்கும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உடுமலை வட்டாரத்தில் பெரியபாப்பனுாத்து, கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிகளில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும், வாளவாடி மற்றும் கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிகளில் புதிய குளம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'புதிய குளம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு, ஊராட்சிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதற்கான நிதிஒதுக்கீடு வந்த பின், பணிகள் துவக்கப்படும்' என்றனர்.

