அதிக ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியத்தை…பிரிப்பது அவசியம்!: அரசின் நடவடிக்கையை எதிர்பார்க்கும் மக்கள்
அதிக ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியத்தை…பிரிப்பது அவசியம்!: அரசின் நடவடிக்கையை எதிர்பார்க்கும் மக்கள்
UPDATED : ஜூன் 19, 2026 03:51 AM
ADDED : ஜூன் 18, 2026 05:21 PM

உடுமலை: உடுமலை ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, எரிசனம்பட்டியை தலைமையிடமாகக்கொண்டு, புதிய ஒன்றியத்தை ஏற்படுத்த, தயாரிக்கப்பட்ட கருத்துரு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதிய ஒன்றியம் குறித்த அறிவிப்பிற்காக, பல கிராம மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உடுமலை ஊராட்சி ஒன்றியம், 1962ல் உருவாக்கப்பட்டது. இந்த ஊராட்சி ஒன்றியம், 203 சதுர கி.மீ., பரப்பளவில், 38 ஊராட்சிகள் மற்றும், 114 குக்கிராமங்களுடன், துவங்கப்பட்டது.
தற்போது, பழங்குடியினர் உட்பட ஒன்றியத்தில், 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆண்டியகவுண்டனுார், தேவனுார்புதுார், சின்னவீரம்பட்டி, கல்லாபுரம் ஆகிய ஊராட்சிகளை எல்லைகளாக, கொண்ட ஒன்றியத்தை நிர்வாக காரணங்களுக்காக, இரண்டாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை எழுந்தது.
கடைக்கோடி கிராம மக்கள், உடுமலையில் அமைந்துள்ள ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து செல்வதில் சிக்கல் மற்றும் ஒன்றிய பொது நிதி அனைத்து ஊராட்சிகளுக்கும் சீராக கிடைப்பதில்லை ; கிராம வளர்ச்சி பாதிக்கிறது ஆகிய புகார்கள் இருந்தது.
கருத்துக்கேட்பு கூட்டம் இதையடுத்து, ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, எரிசனம்பட்டியை தலைமையிடமாகக்கொண்டு, புதிய ஒன்றியத்தை உருவாக்க கருத்துரு தயாரிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், உடுமலை ஒன்றியத்தில், 18 ஊராட்சிகளும், புதிதாக உருவாக்கப்படும், எரிசனம்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகளும் இருக்குமாறு கருத்துரு தயாரிக்கப்பட்டது.
அந்த கருத்துருவின்படி, உடுமலை ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டால், எரிசனம்பட்டி ஒன்றியத்தில், 40 குக்கிராமங்களும், உடுமலை ஒன்றியத்தில், 74 குக்கிராமங்களும் இருக்கும்.
ஒன்றிய கவுன்சிலர் வார்டு உடுமலையில், 17 மற்றும் எரிசனம்பட்டியில், 9 வார்டுகளும் இருக்கும். இந்த கருத்துரு, கடந்த 2014 பிப்., மாதத்தில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மீண்டும், கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டரால், நடத்தப்பட்டு, உடுமலை ஒன்றியத்தில், ஒப்புதல் தீர்மானமும் அப்போது நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, எரிசனம்பட்டி ஒன்றியம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த கருத்துருவும், மக்கள் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை, புதிய அரசு செயல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
புதிய ஒன்றியம் உருவாக்கப்படும் போது, வட்டார வேளாண், தோட்டக்கலைத்துறைகளும் பிரிக்கப்படும் வாய்ப்புள்ளது. தற்போது அதிக சாகுபடி பரப்பை உள்ளடக்கி விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன.
எனவே, இரு விரிவாக்க மையங்கள் செயல்பட்டால், அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
