/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிதி ஒதுக்கியும் துவங்காத கழிவுநீர் கால்வாய் பணி
/
நிதி ஒதுக்கியும் துவங்காத கழிவுநீர் கால்வாய் பணி
ADDED : செப் 15, 2024 01:19 AM
அவிநாசி: அவிநாசி வட்டம், போத்தம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட துளசிபுரம் பகுதியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறையின் கீழ் 15வது நிதி குழு மானிய திட்டத்தில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் வடிகால் கட்டுவதற்கும், உறிஞ்சு குழாய் அமைப்பதற்கும் ஊராட்சி நிர்வாகத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
துளசிபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளதால் அதனை அகற்றிய பின்பே, கழிவுநீர் கால்வாய் கட்ட முடியும் என ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் தொடர்ந்து இரண்டு வருடங்களாக நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இரண்டு வருடமாக பணிகள் நடைபெறாமல் உள்ளது என மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் தெரிவிக்கின்றனர்.
போத்தம்பாளையம் ஊராட்சி தலைவர் சத்யாவிடம் கேட்டபோது, 'வருவாய்த்துறைக்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் மாநில சாலை எல்லையை அளந்து தர ஊராட்சி நிர்வாகத்தினர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டு பல மாதங்கள் ஆனது.
ஆனால் வருவாய்த்துறையினர் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால், கழிவுநீர் கால்வாய் பணிகளை துவங்க முடியாது என ஒப்பந்ததாரர் கூறுகிறார். வருவாய்த்துறையினர் அளந்து கொடுத்தால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியும் என நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகின்றனர்' என்றார்.